ஊட்டி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஊட்டிக்கு குடியரசுத் துணை தலைவர் வருவதையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உட்பட பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநரிடம் இருந்த அதிகாரங்களை தமிழக அரசுக்கு மாற்றம் செய்யும் 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
10 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு போட்டியாக ஊட்டி ராஜ்பவனில் ஏப்ரல் 25, 26-ம் தேதி ஆகிய 2 நாட்கள் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஹெலிகாப்டர் ஒத்திகை; இதையொட்டி குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், வரும் 25-ம் காலை 10.35 மணிக்கு கோவை வருகிறார். இதை தொடர்ந்து அவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் காலை 11.15 மணிக்கு தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். இதைதொடர்ந்து ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இரவு ராஜ்பவன் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் 26-ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், காட்சி முனை ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். 27-ம் தேதி ஊட்டியில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்தை வந்தடைகிறார். அதன் பின்னர், 27-ம் தேதி காலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ- மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்நிலையில் குடியரசுத் துணை தலைவர் நீலகிரி பயணத்தையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை மற்றும் வாகன பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதன்படி ஊட்டி தீட்டுக்கல் மைதானம் மற்றும் மாற்று ஏற்பாடாக மசினகுடியில் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரை இறக்குவது குறித்து சோதனை செய்யப்பட்டது.
மேலும் குடியரசுத் துணை தலைவர் பயணத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார் செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.