பஹல்காம் தாக்குதலால் காஷ்மீரைவிட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்: முதல்வர் உமர் வருத்தம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். விருந்தினர்கள் வெளியேறுவது மனதை வேதனை அடையச் செய்வதாக முதல்வர் உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேதனை: உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஹல்காமில் நேற்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பள்ளத்தாக்கை விட்டு எங்களின் விருந்தினர்கள் வெளியேறுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. ஆனாலும் மக்கள் ஏன் வெளியேற விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம். கூடுதல் விமான சேவைகளுக்காக டிஜிசிஏ மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பணியாற்றி வரும் நிலையில், ஸ்ரீநகர் – ஜம்மு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 44 ஒருவழிப் பாதைக்காக திறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே சுற்றுலா வாகனங்கள் வெளியேறுவதற்கான அனைத்து வசதிகளைச் செய்து கொடுக்கும்படி நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இன்னும் சில இடங்களில் சாலைகள் நிலையில்லாமல் இருப்பதால் இந்த வெளியேற்றும் ஏற்பாடு கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஒருங்கிணைக்கப்பட்டதாகவுமே இருக்கும். ஆனாலும் சிக்கித்தவிக்கும் அனைத்து வாகனங்களையும் வெளியேற்ற நாங்கள் பணியாற்றுகிறோம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் சுதந்திரமான வாகன இயக்கத்தை அனுமதிக்க முடியாது. அனைவரும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

80% பயணங்கள் ரத்து: இதனிடையே சுற்றுலா வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கூறுகையில், “பஹல்காம் பைசரன் புல்வெளியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் அதிக சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பயம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றனர்.

ஸ்ரீநகரைச் சேர்ந்த அஜஸ் அலி என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர் கூறுகையில், “காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். என்றாலும் பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவம் இங்கே நடந்த பிறகு யாரும் இங்கே தங்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ரத்துசெய்யப்பட்டுள்ளவை மிக அதிகம். கிட்டத்தட்ட 80 சதவீத பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அடுத்த ஒரு மாதத்துக்கும் கூட பயணங்கள் ரத்து செய்யப்படலாம். பல ஆண்டுகளாக செய்யப்பட்ட அனைத்து நல்ல விஷயங்களும் வீணாகிவிட்டன. காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலா பயணிகளை கொண்டு வர நிறைய பாடுபடவேண்டி இருக்கும்.” என்றார்.

விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை: இதனிடையே, ஸ்ரீநகர் வழித்தடத்தில் கட்டணங்களை அதிகரிக்கக் கூடாது என்றும், விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தி ஸ்ரீநகர் வழித்தடத்தில் கட்டணங்களை அதிகரிக்கக்கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தினார்.

ஏர் இண்டியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் ஸ்ரீநகரிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு புதன்கிழமை கூடுதலாக நான்கு விமானங்களை இயக்குகின்றன. அதேபோல் விமான நிறுவனங்கள் பயணத்தேதி மாற்றம் மற்றும் ரத்துக் கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.