பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: கபில் சிபல் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் நேற்று கூறியதாவது: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் வெறும் பைத்தியக்காரத்தனமான செயல் அல்ல. இது ஒரு அரசின் (பாகிஸ்தான்) ஆதரவுடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆகும். நமது நாட்டின் சட்டப்படி பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய உள் துறை அமைச்சரின் நடவடிக்கைக்கு நான் தயக்கமின்றி முழு ஆதரவு அளிக்கிறேன். எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன்.

தீவிரவாதிகள் நன்றாக திட்டமிட்டுதான் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏனெனில், அந்தப் பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. குதிரை மூலம் மட்டுமே செல்ல முடியும். உள்ளூர் மக்களும் அதிகம் இருக்க மாட்டார்கள். இதனால், தாக்குதல் நடத்தினால் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு தாமதமாகும் என்பதை அறிந்துதான் அங்கு தாக்குதல் நடத்தி உள்ளனர். அதேபோல, சுற்றுலாப் பயணிகளை ஆண்களை தனியாக அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளனர். எனவே, இந்த சம்பவம தற்செயலானது அல்ல, நன்கு திட்டமிடப்பட்ட செயல்.

காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிர் சமீபத்தில் கூறியிருந்தார். அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதன்மூலம் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்திருப்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.