சென்னை: கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து 20 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
இந்த துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். வாடகை கட்டிடங்களில் இயங்கும் 7 கல்லூரி மாணவியர் விடுதிகளுக்கு ரூ.47.84 கோடியில் சொந்தக் கட்டிடங்கள் கட்டித் தரப்படும். மேலும், ரூ.3 கோடியில் 5 புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்கப்படும்.
அதேபோல், அனைத்து விடுதிகளுக்கும் சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படும். கல்லூரி விடுதிகளில் மாணவர் எண்ணிக்கையானது ரூ.1.46 கோடியில் உயர்த்தப்படும். இதன்மூலம் 885 மாணவிகள் பயனடைவார்கள். விடுதி மாணவர்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு முதல் ரூ.16.24 கோடியில் வரவேற்பு தொகுப்பு வழங்கப்படும். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட 15 தனியார் விடுதிகளில் பயிலும் மாணவருக்கான மாதாந்திர உணவு மானியத்தொகை ரூ.1400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இதுதவிர கல்லூரி விடுதிகளில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை பயிற்சியும், விடுதி மாணவிகளுக்கு ரூ.2.31 கோடியில் தற்காப்பு கலை பயிற்சியும் அளிக்கப்படும். கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் விடுதி மேலாண்மை தகவல் அமைப்பை செயல்படுத்த திட்டக் கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும் என்பன உட்பட அறிவிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.