சென்னை: “வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் `மே’ தினமாகும்.
“வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி” என்று எம்.ஜி.ஆர், மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கிய கருத்துகளை என்றும் உள்ளத்தில் பதிய வைத்து, உழைப்பின் மேன்மையினை இந்த இனிய `மே’ தின திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம்.
உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில், எனது இதயமார்ந்த `மே’ தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.