புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் சுமார் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் 12,748 வகுப்பறைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவை அதிக செலவில் கட்டப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் டெல்லி காவல் துறையின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) கண்டறிந்துள்ளது.
இதையடுத்து அப்போதைய துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது ஏசிபி ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த ஊழலில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பிறரின் பங்கை கண்டறிய விரிவான விசாரணையை ஏசிபி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறியதாவது: 34 ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் பெரும்பாலோர் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கட்டுமானப் பணிகள் உரிய காலக்கெடுவுக்குள் முடிக்கப்படவில்லை. இதனால் கட்டுமான செலவு மிகவும் அதிகரித்துள்ளது. 30 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக அரை நிரந்தர கட்டமைப்பு அடிப்படையில் வகுப்பறைகள்
கட்டப்பட்டன. என்றாலும் 75 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட பக்கா வகுப்பறை செலவுக்கு இணையாக செலவிடப்பட்டுள்ளது. உரிய நடைமுறையை பின்பற்றாமல் ஆலோசகர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டதால் செலவு மேலும் அதிகரித்தது. வகுப்பறைகள் கட்டும் திட்டத்தில் பல முறைகேடுகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அம்பலப்படுத்தியது. என்றாலும் 3 ஆண்டுகளாக இது மறைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது ஏற்கெனவே மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு உள்ளது. இவ்வழக்கில் இருவரும் ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.