சென்னை,
10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஷேக் ரஷீத் 11 ரன்கள், ஆயுஷ் மத்ரே 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாம் கரன், டேவால்ட் பிரேவிஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். பிரேவிஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சாம் கரன் அரை சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சாம் கரன் 88 ரன்கள் எடுத்து வெளியேறினார். பஞ்சாப் அணியில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
இறுதியில் 19.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது.
இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஆர்யா (23), பிரப்சிம்ரன் சிங் (54) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 72 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி சென்றார். வதீரா (5), ஷஷாங் சிங் (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷெட்கே 1 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஜோஷ் இங்லிஸ் (6) ரன்களும், ஜான்சென் (4) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 191 ரன்கள் எடுத்தது. இதனால், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் அகமது மற்றும் பதிராணா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். ஜடேஜா, நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.