மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கெடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மதுரையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அக்கட்சி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிகளை அகற்ற கெடு விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, பொது இடங்களில் உள்ள திமுக கொடிகளை அகற்றுமாறு, அக்கட்சி நிர்வாகிகளை தலைமை கேட்டுக் கொண்டது. அக்கட்சியினரும் பொது இடங்களில் உள்ள கொடிகளை அகற்றி வருகின்றனர்.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்காமல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதனால், பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதே விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவுபெற்ற அரசியல் கட்சியாகும். எங்கள் கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள், 2 எம்.பி.க்கள் உள்ளனர். பட்டியலின மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்காகவும், மாநிலத்தின் மேம்பாட்டுக்காகவும் கட்சி செயல்பட்டு வருகிறது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள விசிக கொடிக்கம்பத்தை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்ட உரிமைக்கு எதிரானது.
எனவே, பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தது.