ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். வரலாற்றில் ஓரணியில் விளையாடி அதிக ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில், 231 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6,024 ரன்களை சேர்த்துள்ளார்.
நேற்று நடந்த போட்டியில், 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களை ரோகித் எடுத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவருடைய 3-வது அரை சதம் இதுவாகும்.
முதல் 5 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே எடுத்து மெல்ல ரன்களை சேர்க்க தொடங்கிய ரோகித், அடுத்தடுத்து சிறப்பாக விளையாடி கடைசி 5 போட்டிகளில் 234 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில், 2 அரை சதங்கள் (ஆட்டமிழக்கவில்லை) மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 53 ரன்கள் எடுத்ததும் அடங்கும்.
இதனால், மும்பை அணிக்காக 6 ஆயிரம் ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, ஐ.பி.எல். வரலாற்றில் ஓரணியில் விளையாடி அதிக ரன்கள் சேர்த்த 2-வது வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த தனித்துவ பட்டியலில், பெங்களூரு அணியின் வீரரான விராட் கோலி 8,871 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி, 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.