கொல்கத்தா: கொல்கத்தாவில் தீ விபத்து நடந்த ஓட்டலை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். இதனிடையே ஓட்டல் உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ரித்துராஜ் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு தீ ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மற்ற 2 உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக ஜோராசங்கோ காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்த ஒட்டலின் உரிமையாளர் அகாஷ் சாவ்லா மற்றும் மேலாளர் கவுரவ் கபூர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, விபத்து நடந்த ஓட்டலை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். அப்போது, இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “கொல்கத்தா மற்றும் மற்ற நகரங்களில் உள்ள கட்டிடங்களில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களில் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.