புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக்கொண்டுள்ள அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பதை ரகசியம் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸின் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் கடந்த வாரம் உரையாடல் நிகழ்த்திய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்து பாகிஸ்தான் தவறிழைத்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதே ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ மேற்கொண்ட உரையாடலில், குவாஜா எம் ஆசிப் கூறியதை வழிமொழிந்தார். “பாதுகாப்பு அமைச்சர் கூறியதைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை. இதன் விளைவாக, நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தின் பல அலைகளை நாங்கள் கடந்து வந்துள்ளோம். நாங்கள் அனுபவித்தவற்றின் விளைவாக, எங்களுக்கான பாடங்களையும் கற்றுக்கொண்டோம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உள் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். பாகிஸ்தானின் வரலாற்றைப் பொறுத்தவரை, அது வரலாறு, இன்று நாம் அதில் பங்கேற்கவில்லை. அது நமது வரலாற்றின் ஒரு துரதிர்ஷ்டவசமான பகுதி என்பது உண்மைதான்.” என்று பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
குவாஜா எம் ஆசிப் ஒப்புதல்: ஸ்கை நியூஸ் விவாதத்தின்போது, “பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று நெறியாளர் யால்டா ஹக்கீம், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா எம் ஆசிப்பிடம் கேட்டார். அதற்கு குவாஜா எம் ஆசிப், “கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காக நாங்கள் இதைச் செய்தோம். அமெரிக்காவுக்காக மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகள் மற்றும் இங்கிலாந்துக்காகவும் நாங்கள் இந்த மோசமான வேலையை செய்து வருகிறோம். அது ஒரு தவறு. பாகிஸ்தான் அதனால் பாதிக்கப்பட்டது.
சோவியத் – ஆப்கானிஸ்தான் போரின் போதும், 9/11-க்குப் பிறகு தலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரின்போதும் மேற்கு நாடுகளுடன் இஸ்லாமாபாத் (பாக். அரசு) இணைந்திருக்காவிட்டால் பாகிஸ்தானின் கடந்த காலப் பதிவு ‘குற்றச்சாட்டுக்கு இடமில்லாதது’ ஆக இருந்திருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் முஸ்லிம் அல்லாத 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஒப்புதல் பேச்சுக்கள் வெளியாகி இருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.