புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி என எந்த விதத்திலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தியா அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவிழ்த்து விடுகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 1. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், 2. அட்டாரியில் உள்ள சோதனைச்சாவடி மூடல் 3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். 4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். 5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து வான்வழி பயன்பாட்டில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வந்தவண்னம் உள்ளன.
அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் தடை விதித்து இந்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கான தடை உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2024 – 2025 ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா 447.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளது. அதேசமயம் வெறும் 0.42 யுஎஸ் டாலர் மதிப்பிலான சொற்பமான அளவிலேயே இறக்குமதி செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
சற்றும் தளராத பாகிஸ்தான்! – பாகிஸ்தானுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்ற கணிப்பில் இந்தியா இறக்குமதி தடையை அமல்படுத்தினாலும் கூட பாகிஸ்தான் பதறுவதாகத் தெரியவில்லை. இந்தியாவின் உடனடி 5 நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொள்வதாகக் கூறியது.
மேலும், இன்று (மே 3) 450 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக் கூடிய அதிநவீன ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ராணுவம் பலமாக இருப்பதை உறுதி செய்யவும், நவீன ஆயுதங்களின் தரநிலையை பரிசோதனை செய்யவும் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது.
‘புவி அரசியலில் ஒரு ஷிஃப்ட்’ – அமெரிக்கா – சீனா நிகழ்த்திய வர்த்தகப் போர் விவகாரம் சற்றே இளைப்பாறும் சூழலில், இப்போது இந்தியா – பாகிஸ்தான் நடத்திக் கொள்ளும் போட்டாப் போட்டி நடவடிக்கைகள் புவி அரசியலில் கவனம் பெற்றுள்ளது. ட்ரம்ப் வரி விவகாரங்கள் தணிந்துள்ள நிலையில் அமெரிக்கா தற்போது இந்தியா – பாக். விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கிறது. இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 2 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மார்கோ ரூபியோ வலியுறுத்தி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரு நாடுகளும் சுமுக தீர்வை காண வேண்டும். எனினும், இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார்.