புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அதை யாரும் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி பங்கேற்றார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்து 10 நாட்களான நிலையில் பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்வது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது மாதிரியான நடவடிக்கை அர்த்தமற்றது என அவர் கூறியுள்ளார்.
“பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகிறது. அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் பதிலடியை பார்க்க ஒட்டுமொத்த தேசமும் காத்துக் கொண்டுள்ளது. 56 இன்ச் மார்பு எப்போது செயலில் இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு விரைந்து செயல்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.
புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீதான இந்தியா மேற்கொண்ட துல்லியத் தாக்குதல் குறித்து ஆதாரம் ஏதும் இல்லை. அதை நாம் யாரும் பார்க்கவும் இல்லை. இந்த தாக்குதல் எப்போது பாகிஸ்தானில் நடந்தது? எங்கு நடந்தது? கொல்லப்பட்டவர்கள் யார் என எந்த விவரமும் இல்லை.” என சரண்ஜித் சிங் சன்னி கூறியுள்ளார்.
பாஜக எதிர்வினை: “நம் தேசத்தின் ராணுவத்தை மட்டுப்படுத்தும் வகையிலான கருத்து இருந்தது. இந்தியாவின் துல்லியத் தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்கும் சரண்ஜித் சிங் சன்னி, இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மோசமான மனநிலையை பிரதிபலித்துள்ளார்.
துல்லியத் தாக்குதல் குறித்த ஆதாரம் வேண்டுமானால் ராகுல்காந்தி உடன் பாகிஸ்தான் சென்று பார்த்து விட்டு வரவும். இந்த தாக்குதல் நடந்தது குறித்தும், சேதங்கள் ஏற்பட்டது குறித்தும் பாகிஸ்தானே கூறியுள்ளது” என டெல்லி மாநில பாஜக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் கூறியுள்ளார்.
“காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு காங்கிரஸின் செயற்குழு கூட்டம். ஆனால், உள்ளே நடப்பது எல்லாம் பாகிஸ்தான் ஆதரவு செயற்குழு கூட்டம். இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சரண்ஜித் சிங் சன்னி, துல்லியத் தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்கு ஆக்சிஜன் கொடுக்கும் எந்தவொரு வாய்ப்பையும் காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது” என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.