புதுடெல்லி: இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு தொடர்பான 131 மில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள் மற்றும் உபகரணங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடல் கண்காணிப்பு மென்பொருள், தொழில்நுட்ப உதவி கள குழு பயிற்சி, தொலைதூர மென்பொருள், பகுப்பாய்வு ஆதரவு, தளவாட மற்றும் திட்ட ஆதரவின் பிற தொடர்புடைய உபகரணங்களை அமெரிக்கா வழங்க வேண்டும் என இந்தியா சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், 131 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த கொள்முதலுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க டிபன்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிக்கையில், “ இந்தியாவுக்கு கடல்சார் மென்பொருள், உபகரணங்களை விற்பனை செய்ய அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் அமெரிக்க-இந்திய உறவை மேலும் வலுப்படுத்த உதவும்.
மேலும் இது, இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளதார முன்னேற்றத்துக்கு முக்கிய சக்தியாக இருக்கும். இதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்கான ஆதரவு அதிகரிக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வி்ற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ள இந்த மென்பொருள் மற்றும் உபகரணங்கள் மூலம் இந்தியாவின் கடல்சார் கள விழிப்புணர்வு, பகுப்பாய்வு திறன், மூலோபாய நிலைப்பாடு வலுப்படும் என்பதுடன் எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறனை மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.