நைரோபி,
கென்யாவில் மத்திய வலது ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மத்திய இடது ஆரஞ் ஜனநாயக முன்னணி அந்நாட்டின் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் ஒங் அண்டு . இவர் கசிபல் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்றார்.
இந்நிலையில், சார்லஸ் கடந்த புதன்கிழமை காரில் தலைநகர் நைரோபியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு கோங்க் சாலையில் உள்ள சந்திப்பில் சிக்சனுக்காக காரில் காத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், காரில் இருந்த எம்.பி. சார்லஸ் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், எம்.பி. சார்லஸ் சம்பவ இடத்திலேயே காரிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சார்லசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது