அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே ஐதராபாத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக இந்த இணை பவர்பிளேவான 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன் எடுத்துள்ளது. இதில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ரன் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து பட்லர் களம் இறங்கினார். மறுபுறம அதிரடியாக ஆடிய கில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 38 பந்தில் 76 ரன் எடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து பட்லருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இதில் பட்லர் அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷாரூக் கான் களம் இறங்கினார். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் 21 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட், கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் ஆடியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். ஹெட் 20 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அபிஷேக் சர்மா, தன் பங்குக்கு 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் அபார பந்துவீச்சால், ஐதராபாத் அணி பவுண்டரிகள் எடுக்க மிகவும் சிரமப்பட்டது.
இறுதியில் ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 186 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. இதன்மூலம் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த தோல்வியின் மூலம் ஐதராபாத் அணி, பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்தது.