Harbhajan Singhs Prediction on CSK vs RCB Match : இன்று ஐபிஎல்லின் 52வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதற்கு முன்பு இரு அணிகளும் சேப்பாக்கத்தில் ஒருமுறை மோதியுள்ளன. அந்த போட்டியில் சிஎஸ்கேவை ஆர்சிபி தோற்கடித்தது. அத்துடன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது. அதன்பிறகு நடந்த போட்டிகளில் சந்தித்த தொடர் தோல்விகளால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே. இருப்பினும் முந்தைய தோல்விக்காக ஆர்சிபி அணியுடன் பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது சிஎஸ்கே. இந்த சூழலில் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் கணிப்பு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இன் 51வது போட்டியின் போது, ஆர்சிபி, சிஎஸ்கே போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ஹர்பஜன் சிங் கணித்தார். சின்னசாமியில் மீண்டும் ஒருமுறை சிவப்புக் கொடிகள் பறக்கப்போகிறது என்று அவர் கூறினார். ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்றும் ஹர்பஜன் சிங் கூறினார்.
சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை
இந்த சீசனில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் புதிய பந்தில் மிகவும் திறம்பட செயல்படுகிறார். இதுவரை 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். பவர்பிளேயில், 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஹேசில்வுட். இது இந்த சீசனில் 1-6 ஓவர்களில் மிகவும் சிக்கனமான பந்துவீசிய இரண்டாவது பவுலர் இவர் தான். முதல் இடத்தில் சந்தீப் சர்மா (6.8) எகானமியில் உள்ளார். ஹேசில்வுட் ஒரு போட்டியின் தொடக்க ஓவர்கள், மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என மூன்று கட்டங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். பவர்பிளேயில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், மிடில் ஓவர்களில் 5 விக்கெட்டுகளையும், டெத் ஓவர்களில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
டிம் டேவிட் எனும்ஆல்ரவுண்டர்
இந்த சீசனில் RCB அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கில் ஒன்று, டிம் டேவிட். ஃபினிஷராக களமிறங்கி இதுவரை, அவர் 7 இன்னிங்ஸ்களில் 184 ரன்கள் எடுத்துள்ளார், இரண்டு முறை மட்டுமே அவுட்டாகியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 198 ஆக உள்ளது, அதே நேரத்தில் டெத் ஓவர்களில் (17-20) அவர் 123 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 228 ஆகும், மேலும் அவர் சராசரியாக ஒவ்வொரு 2.7 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸர் அடிக்கிறார். இந்த சீசனில் டெத் ஓவர்களில் அதிகபட்சமாக 11 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ். தோனி 9 சிக்ஸர்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அசுதோஷ் சர்மா தலா 7 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர். கடந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிம் டேவிட் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார், இந்த முறையும் அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
சின்னசாமியில் விராட் கோலியின் ஆதிக்கம்
ஐபிஎல் 2025-ல் விராட் கோலி சிறந்த ஃபார்மில் உள்ளார். இதுவரை 10 இன்னிங்ஸ்களில் 63.3 என்ற சராசரியிலும், 139 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 443 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 6 அரைசதங்கள் அடங்கும். இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்ஷனுக்கு (456) அடுத்தபடியாக அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராகவும் விராட் கோலியின் சாதனை சிறப்பாக உள்ளது. அவர் 33 இன்னிங்ஸ்களில் 1084 ரன்கள் எடுத்துள்ளார், அதில் 9 அரை சதங்கள் அடங்கும். 126 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். அவர் சின்னசாமி ஸ்டேடியத்தின் மாஸ்டர், அங்கு அவர் ஐபிஎல்லில் 23 அரை சதங்கள் மற்றும் 4 சதங்கள் உட்பட 3140 ரன்கள் எடுத்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த முறை அவரது பேட் மீண்டும் CSKக்கு எதிராகப் அதிரடியா சழல வாய்ப்புள்ளது.
ஷிவம் துபே மோசமான ஆட்டம்
இந்த சீசனில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிஎஸ்கே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சிவம் துபே ஒப்பீட்டளவில் மெதுவாக விளையாடுகிறார். 2025 ஆம் ஆண்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 8 இன்னிங்ஸ்களில் 114 ஸ்ட்ரைக் ரேட்டில் 87 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், அதே நேரத்தில் 2024 இல் அவரது ஸ்ட்ரைக் ரேட் 155 ஆக இருந்தது. இந்த சீசனில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 50+ பந்துகளை எதிர்கொண்ட வீரர்களின் பட்டியலில் அவர் 5வது குறைவான ஸ்ட்ரைக் ரேட் (114) வைத்திருக்கிறார். இந்தப் பட்டியலில் தீபக் ஹூடா (62), ரவீந்திர ஜடேஜா (101), துருவ் ஜூரெல் (105) மற்றும் நிதிஷ் ரெட்டி (109) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த சீசனில் முழு சிஎஸ்கே அணியும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதுவரை, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மட்டும் சிஎஸ்கே 31 விக்கெட்டுகளை இழந்துள்ளனர், இது இந்த சீசனில் ஒரு அணி ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக கொடுத்த விக்கெட்டுகளில் அதிகபட்சமாகும்.
பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற ஆர்சிபி திட்டம்
ஒரு வார ஓய்வுக்குப் பிறகு ஆர்சிபி அணி இந்தப் போட்டியில் விளையாட உள்ளது. காய்ச்சல் காரணமாக பில் சால்ட் கடந்த போட்டியில் விளையாடவில்லை, ஆனால் இப்போது அவருக்கு போதுமான ஓய்வு கிடைத்துள்ளது, மேலும் அவர் இந்த போட்டியில் விளையாட உள்ளார். ஆர்சிபி அணி தற்போது 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்சிபி மீண்டும் முதலிடத்திற்கு செல்லும். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேஆஃப் டிக்கெட்டும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும். மறுபுறம், CSK-க்கு பிளே ஆப் கனவு முடிந்துவிட்டது. இனி அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.