விஜயவாடா: எஸ்சி, எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய நாளே பட்டியலின, பழங்குடியின தகுதியை இழந்து விடுகிறார்கள் என்று ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், கொத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஆனந்த். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் சந்தோலு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், “கொத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி மற்றும் 5 பேர், எனது சாதி பெயரை சொல்லி கீழ்த்தரமாக திட்டினர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குண்டூர் வன்கொடுமை பிரிவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த முறையீட்டில், “கடந்த 10 ஆண்டுகளாக ஆனந்த் கிறிஸ்தவ பாதிரியாராக உள்ளார். சாதி பெயர் சொல்லி திட்டியதாக அவர் புகார் அளித்திருக்கிறார். கிறிஸ்தவராக மாறிய நபர் எஸ்சி, எஸ்டி தகுதியை இழந்து விடுவார். இதை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிநாத் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். “எஸ்சி, எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய நாளே பட்டியலின, பழங்குடியின தகுதியை இழந்து விடுகிறார்கள். இதன்படி நீங்களும் (பாதிரியார் ஆனந்த்) எஸ்சி பிரிவுக்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். நீங்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியாது.
இந்துக்களாக உள்ள எஸ்சி, எஸ்டிக்களுக்கு மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டம் செல்லுபடியாகும். புகார் அளித்தபோது போலீஸார் முறையாக விசாரித்து வழக்கு பதிவு செய்திருக்கலாம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ராமிரெட்டி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதி ஹரிநாத் தீர்ப்பில் கூறியுள்ளார்.