ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து, 15 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75).
இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன் கவிசங்கர், மகள் பானுமதி ஆகியோருக்கு திருமணமான நிலையில், ராமசாமி தன் மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், முத்தூரில் வசித்து வரும் கவிசங்கர், ராமசாமிக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, அருகில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, தோட்டத்துக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதன்படி, கவிசங்கரின் உறவினர்கள் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார், டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்.பி. சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
ராமசாமி-பாக்கியம் ஆகியோர் தனியாக வசிப்பதையறிந்த கும்பல், அவர்களைக் கொலை செய்து, பாக்கியம் அணிந்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அவர்களது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 3 நாட்களாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களது உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்தனர். 30 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம் என போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உடல்களைப் பெற்றனர்.
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல், அச்ச நிலையில் உள்ளனர். இனியாவது சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கொங்கு பகுதியில் மீண்டும் மீண்டும் கொலை சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, சட்டம்-ஒழுங்கை சீரமைக்க முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: தொடர் படுகொலைகளை திமுக அரசால் தடுக்க முடியவில்லை. காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர், உரிய கவனத்துடன் செய்லபட வேண்டும்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் சிவகிரி கொலை-கொள்ளை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.