அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே ஐதராபாத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக இந்த இணை பவர்பிளேவான 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி வரும் சாய் சுதர்சன் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அவர் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார்.
அதாவது குறைந்த இன்னிங்சில் 2000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் (54 இன்னிங்ஸ்) 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஷான் மார்ஷ் (53 இன்னிங்ஸ்) உள்ளார்.