சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை பொதுமக்களிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆர்பிஎஃப் காவலரை தாக்கினர். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
இதைடுத்து அவர்களை பிடிக்க சென்னை கடற்கரை – தாம்பரம் இடையில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், 3 இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிவது பற்றி எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், எழும்பூர் ஆர்பிஎஃப் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டின், மாம்பலம் காவல் ஆய்வாளர் சிவநேசன் தலைமையில் ஆர்பிஎப் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன், தலைமை காவலர்கள் ஜி.கண்ணன், முத்துக்குமார், முருகலிங்கம், இம்மானுவேல் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியான விதமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை விசாரிக்க முயன்றபோது, தப்பி ஓடினர், இதையடுத்து, அவர்களை ஆர்பிஎஃப் போலீஸார் துரத்தி பிடித்து கைது செய்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பூந்தமல்லியைச் சேர்ந்த கார்த்திக் (25), ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் முஸ்தபா (20), சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் என்பதும், ஆர்பிஎஃப் போலீஸாரை தாக்கி தப்பி வந்த நபர்களும் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்கள் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆர்.பி.எஃப் காவலரை தாக்கியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு 3 பேரை கைது செய்த ஆர்.பி.எஃப் தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.