சென்னை: கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘நான் விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும், கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். சமீபத்தில் நடந்த பொதுக் குழுவில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வானதற்கு எனது வாழ்த்துக்கள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் வெளியாகி வைரல் ஆனதைத் தொடர்ந்து, நல்லதம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “உயர்மட்டக் குழு பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு மட்டுமே கேட்டேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்றுதான் கூறினேன். என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியில் நான் தொடர்ந்து பயணிப்பேன். தொண்டனாக இருப்பேன்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
பின்னணி என்ன? – தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக மீண்டும் தேர்வானார். அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி தரப்பட்டது.
அந்தப் பொறுப்பில் இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு, உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் துணைச் செயலாளராக தாம் நியமிக்கப்படுவோம் என அவர் எதிர்பார்த்தாகவும், அந்தப் பொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.