‘பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகம்’ – சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் தீவிர சோதனை

கொழும்பு: சென்னையில் இருந்து இலங்கைக்குச் சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேடப்படும் பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்புவில் அந்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் சென்னையில் இருந்து இன்று காலை 10.26 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், காஷ்மீரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு 6 பயங்கரவாதிகள பயணம் செய்கின்றனர். அவர்களிடம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பகல் 11.59 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு படையினர், அதிரடி படையினர், விமானத்தை சுற்றி வளைத்து கொண்டு தீவிர சோதனைகள் நடத்தினர்.

பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை நடத்தி, அவர்களின் விவரங்களை சேகரித்தனர். சோதனை முடிவில், பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்பது உறுதியானது. இந்த மிரட்டல் மின்னஞ்சல், வழக்கம் போல் சென்னை விமான நிலையத்துக்கு வரும் மின்னஞ்சல் என்பது தெரியவந்தது. இதனால் சென்னை விமான நிலையத்திலும், கொழும்பு விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.