புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, “மறுஉத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்கள் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக அமலாகும் வகையில் தடைவிதிக்க ஏதுவாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக். கப்பல்களுக்கும் தடை: அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், “இந்திய சொத்துக்கள், சரக்கு மற்றும் உள்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில், வணிகக் கப்பல் சட்டம் 1958, பிரிவு 411-ன் கீழ் உடனடியாக அமலுக்கு வரும்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தேசிய நலனுக்கு சேவையாற்ற மிகவும் பொருத்தமான முறையில், இந்திய வணிகக் கடற்படையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும், அதன் திறமையான பராமரிப்பினை உறுதி செய்யவதையும் இச்சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் நிறுத்தம்: பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையிலான நடவடிக்கையின் முதல் இலக்காக வர்த்தகம் மாறியுள்ளது. ஏற்கெனவே அட்டாரி – வாகா எல்லை வழியான அனைத்து வர்த்தகத்துக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு மிகவும் ஆதரவான நாடு என்ற நிலையை இந்தியா திரும்பப் பெற்றதில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நேரடி வர்த்தகம் வெகுவாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி வெகுவாக குறைந்திருந்தாலும், துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பு துறைமுகங்கள் வழியாக சில பொருட்கள் இந்தியாவுக்கு வந்தன. கடந்த 2023- 24 ஆண்டில், இந்தியா பாகிஸ்தானில் இருந்து 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை, குறிப்பாக விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் அதன் மருத்துவப் பொருட்களுக்கான தேவைக்கு இந்தியாவையே சார்ந்திருந்தது. இந்தியா தற்போது அனைத்து வகையான வர்த்தகத்தையும் தடை செய்திருப்பதால், பாகிஸ்தான் அதன் மருத்துவப் பொருட்களுக்கான தேவைக்கு வேறு வழியை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.