பூஞ்ச்: மத்திய அரசு உத்தரவால் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட காஷ்மீர் போலீஸ்காரர் மற்றும் அவரது உடன்பிறந்த 8 பேர், நீதிமன்ற உத்தரவால் பூஞ்ச் திரும்பினர்.
கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் எடுத்துக் கொண்டது. அங்கு வசித்த ஃபகுர் தின் மற்றும் அவரது மனைவி பாத்திமா பீ ஆகியோர் தங்கள் 3 குழந்தைகளுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாமில் வசித்தனர். அங்கு அவர்களுக்கு மேலும் 6 குழந்தை பிறந்தது.
கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஃபகுர் தின் குடும்பத்தினர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஜம்மு காஷ்மீர் முன்பு மாநிலமாக இருந்தபோது இவர்கள் நிரந்தர குடியுரிமை சான்றிதழும் பெற்றனர்.
ஃபகுர் தினின் மகன் இப்திகார் அலி என்பவர் ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் கடந்த 27 ஆண்டுகளாக பணியாற்றுகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு கடந்த 2019-ம் ரத்து செய்யப்பட்டதால், முந்தை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வழங்கிய நிரந்த குடியுரிமை சான்றிதழும் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதால், இப்திகார் அலி மற்றும் அவருடன் பிறந்த 8 பேரையும் பாகிஸ்தான் செல்ல பூஞ்ச் பகுதி துணை ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இப்திகார் அலி சார்பில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பூஞ்ச் பகுதியின் சால்வா கிராமத்தில் தங்களின் தந்தை பெயரில் 17 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்றும், 1965-ம் ஆண்டு போரில் பாகிஸ்தான் காஷ்மீரின் சில பகுதிகளை எடுத்துக் கொண்டதால், அங்குள்ள முகாமில் வசிக்க நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தமனுவை விசாரித்த நீதிபதி ராகுல் பார்தி, இப்திகார் அலி மற்றும் அவருடன் பிறந்தவர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பும் உத்தரவுக்கு தடை விதித்தார். இதையடுத்து பஞ்சாப்பின் வாகா எல்லைக்கு அனுப்பப்பட்ட இப்திகார் அலி மற்றும் அவருடன் பிறந்தவர்கள் காஷ்மீருக்கு திருப்பி அழைத்து வரப்பட்டனர்.
இப்திகார் அலி மற்றும் அவரது மறைந்த தந்தை ஃபகுர் தின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து பூஞ்ச் துணை ஆணையர் பதில் அளிக்க நீதிபதி ராகுல் பார்தி உத்தரவிட்டுள்ளார். இந்த மனு மே 20-ம் தேதி விசாரிக்கப்படுகிறது.