வேவ்ஸ் உச்சி மாநாடு 2025 ( World Audio Visual and Entertainment Summit) என்று சொல்லப்படும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, நாளை 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான ஒலி-ஒளி தொடர்பாக பல்வேறு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய திரைபிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர். தொடக்க விழாவின் போது ரஜினிகாந்த், அமீர்கான், ரன்பீர் கபீர், தீபிகா படுகோனே, மோகன்லால், சிரஞ்சீவி, ஷாரூக்கான், கார்த்தி, ரவிமோகன், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜமௌலி , அக்ஷய் குமார் என இந்திய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்சினிமாவில் இருந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்த்தில் இருந்து தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு உள்பட பலரும் பங்கேற்று வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பேசினால், வியந்து விவரித்தார். |

” திரைத்துறையினருக்கு இப்படி ஒரு மாநாடு பயனுள்ளது. சினிமா, டிஜிட்டல், மீடியா என பொழுது போக்கு துறையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம், தொழிற்துறை வளர்ச்சிகள் குறித்து பல்வேறு அமர்வுகள், கலாந்தாய்வும் கூட்டங்கள் நடந்து வருகின்றன. நம்மூர் உணவு திருவிழா போல, இது தொழில்நுட்ப திருவிழானு சொல்லலாம். எடிட்டிங், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என பல்துறைகளிலும் புதுசுபுதுசா என்னென்ன விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் என பல தளங்களும் தங்களுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து ஸ்டால்களில் விளக்கினார்கள். தொழில்நுட்பம் குறித்தான ஸ்டால்கள் வைக்கப்பட்டிருந்தன.

சாட் ஜிபிடியை பயன்படுத்தி படத்திற்காக ஸ்கிரிப்ட்டை எழுதியதாக சில இயக்குநர்கள் தெரிவித்தார்கள். கதை சொல்லியாக ஏ.ஐ.தொழில்நுட்பம் விளங்கும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருந்தது. பாடகிகள் சித்ரா மேம், ஷ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் கீரவாணி சார் பலரையும் அங்கே பார்க்க முடிந்தது. கரீனாகபூர், விஜய் தேவரகொண்டா, கரண் ஜோகர் பங்கேற்ற பேனல் டிஸ்கஷன் போன்று, பல விவாத அமர்வுகள் இருந்தது. இந்திய சினிமாவின் மாற்றம் குறித்து ரவி மோகன், சோனாலி குல்கர்னி என பலரும் விவாதித்தார்கள். இப்படி பல அமர்வுகளை பார்த்தோம். தொழில்நுட்ப அப்டேட்களையும் நிறைய கற்றுக்கொண்டோம்.” என்கிறார் சுரேஷ் காமாட்சி.