‘இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்’ – பாகிஸ்தான் தூதர் மிரட்டல்

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்” என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி ஆர்டி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வெறித்தனமான ஊடகங்களும், அங்கிருந்து வரும் சில பொறுப்பற்ற அறிக்கைகளும் எங்களை சில கட்டாயத்துக்கு நிர்பந்திக்கின்றன. அங்கிருந்து கசிந்துள்ள சில தகவல்கள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

இந்தியா – பாகிஸ்தான் போர் என்று வரும் போது நாங்கள் எண்ணிக்கை பலம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான பதிலடியோடு, அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். பாகிஸ்தான் மக்களின் முழு ஆதரவுடன் ராணுவம் முழு சக்தியையும் வெளிப்படுத்தும்.” என்றார்.

முன்னதாக, கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு தீவிர பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது. இச்சூழலில், பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் அவ்வப்போது இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

130 அணு ஆயுதங்கள்: அந்த வகையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி, “சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், போருக்கு தயாராக இருக்க வேண்டும். கோரி, ஷஹீன் மற்றும் ஹஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் நாங்கள் காட்சிக்கு வைத்திருக்கவில்லை. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

‘இருப்புக்கு அச்சுறுத்தல் வந்தால்..’ – அதேபோல், ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், “சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் கட்டாயம் தாக்குவோம்.

அணு ஆயுத விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். அதேநேரத்தில், எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்.” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.