டெல் அவிவ்: இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது. தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையமான பென் குரியன் மீது நடந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ, “பென் குரியன் விமான நிலையம் இனி விமான போக்குவரத்துக்கு பாதுகாப்பானது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் காரணமாக மத்திய இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டன.
தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில், “யார் எங்களைத் தாக்கியிருந்தாலும், அவர்கள் ஏழு மடங்குக்கு திருப்பித் தாக்கப்படுவார்கள்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.
திசைதிருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்: இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்ற ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்கு திசை திருப்பிவிடப்பட்டது. ஏர் இந்தியா விமானம் டெல் அவிவ்-க்கு செல்வதற்கு ஒருமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ139 பென் குரியன் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் காரணமாக அபுதாபிக்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் அபுதாபியில் இயல்பாக தரையிறங்கியது. பின்பு சிறிது நேரத்தில் டெல்லி திரும்பியது.
தாக்குதலின் விளைவாக, மே 6ம் தேதி டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்கும், அங்கிருந்து டெல்லிக்கும் வரும் அனைத்து ஏர் இந்தியா விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மற்றும் விமானப் பணியாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்து எங்களின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறார்கள்.” என்று தெரிவித்தார்.