எல்லையில் இந்திய படைகள் குவிப்பால் பயிற்சி முகாம்களை காலி செய்த பாக். தீவிரவாதிகள்

எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு இடம்பெர்ந்துள்ளனர்.

கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி, ராணுவ தளபதிகளுடனும், மத்திய அமைச்சர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதனால், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்கு ஊடுருவி சென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த 9 நாட்களாக பதற்றம் நீடிக்கிறது.

மேலும், இந்திய போர் விமானங்கள் அரபிக் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அதேபோல் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட பாகிஸ்தான் ராணுவமும் எல்லையில் போர் விமானங்களை குவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய எல்லையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து நாசவேலைகளில் ஈடுப்டடு வந்தனர். மேலும் அங்கு தீவிரவாதிகள் பல நவீன முகாம்களை நடத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முகாம்களில் இருந்துதான், இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த முகாம்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

இதனால், அந்த பயிற்சி முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் துல்லிய தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற பீதி தீவிரவாதிகளிடம் நிலவுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக தீவிரவாதிகள் எல்ஓசி பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன. மேலும், அங்கு செயல்பட்டு வந்த, பெரும்பாலான தீவிரவாத பயிற்சி முகாம்கள் பயத்தில் மூடப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளையும் கைவிட்டு விட்டு தீவிரவாதிகள் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இதுதொடர்பான தகவல்கலை, உளவுத்துறை சேகரித்து, தீவிரவாதிகளின் இடம்பெயர் நிகழ்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி(பிஓகே) அருகே ஜம்மு டிவிஷன் பகுதியில் 3 இடங்களில் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வந்தனர். அந்த முகாம்களில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்ததாகத் தெரிகிறது. எல்லையில் நீடிக்கும் பதற்றம் காரணமான அந்த முகாம்களை மூடி விட்டு தீவிரவாதிகள் கூட்டம் கூட்டமாக சென்றதை இந்திய ராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

ஜம்மு டிவிஷனில் உள்ள ஷகார்கர், சமாஹ்னி, சுக்மால் ஆகிய பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் காலியாக உள்ளகதாகத் தெரிகிறது. இந்த மூன்று பகுதிகளுமே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மிக அருகில் உள்ளவை.

இதுதொடர்பாக மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “2019-ல் பதான்கோட் பகுதியில் இந்தியா, துல்லியத் தாக்குதல் நடத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த பயத்தில் இருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை. இதனால் எல்ஓசி அருகில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அவர்கள் காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். பதுங்கு குழிகளை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

இந்த வகை முகாம்களில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் தங்கியிருந்து, எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.