ஐபிஎல்: கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா ,

கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதலில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது மூன்று ஆட்டங்களிலாவது வென்றால் வாய்ப்பில் நீடிக்கலாம். ரகுவன்ஷி, கேப்டன் ரஹானே, சுனில் நரின் பேட்டிங்கில் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. கடைசியாக களம் இறங்கிய 3 ஆட்டங்களில் 7, 14, 7 ரன் வீதமே எடுத்துள்ளார். மிடில் வரிசையில் அவர் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அத்துடன் சொந்த ஊரில் முடிவு கிடைத்த 4 ஆட்டங்களில் 3-ல் தோற்றுள்ள கொல்கத்தா அணி இந்த முறை உள்ளூர் சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் இனி நெருக்கடியின்றி விளையாடுவார்கள். ஏற்கனவே லீக்கில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்க்க முயற்சிப்பார்கள். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்தில் சதம் விளாசிய 14 வயது ‘இளம் புயல்’ வைபவ் சூர்யவன்ஷி மீதமுள்ள ஆட்டங்களிலும் ரன்வேட்டை நடத்துவாரா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பஞ்சாப் – லக்னோ அணிகள்

மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் – லக்னோ அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக 191 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்திய பஞ்சாப் அணி அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையுடன் ஆயத்தமாகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (22 சிக்சருடன் 346 ரன்), பிரப்சிம்ரன் சிங் (3 அரைசதத்துடன் 346 ரன்) தான் பஞ்சாப் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். இவர்கள் ‘பவர்-பிளே’ வரை தாக்குப்பிடித்து விட்டாலே பஞ்சாப் மெகா ஸ்கோரை குவித்து விடும். மிடில் வரிசைக்கான வேலையை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஜோஷ் இங்லிஸ் பார்த்துக் கொள்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல் வலு சேர்க்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், பஞ்சாப் ‘பிளே-ஆப்’ வாய்ப்பை வெகுவாக நெருங்கி விடும்.

முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்ட லக்னோ அணி அடுத்த 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றது. டெல்லி, மும்பைக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களில் சொதப்பலான பேட்டிங்கால் தோல்வியை தழுவியது. மார்க்ரம் (335 ரன்), மிட்செல் மார்ஷ் (378 ரன்), நிகோலஸ் பூரன் (404 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் சோடை போனால் அதன் பிறகு பெரும்பாலும் திண்டாடி விடுகிறது. ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் (10 ஆட்டத்தில் 110 ரன்) பார்மின்றி தடுமாறுவதும் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கியம் காரணமாகும். இனி ஒவ்வொரு மோதலும் வாழ்வா-சாவா? கட்டத்தில் ஆட வேண்டி இருக்கும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ, அதற்கு பதிலடி கொடுக்கவும் இது சரியான சந்தர்ப்பமாகும்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.