Kagiso Rabada : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பிளேயரான ககிசோ ரபாடா ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் இருந்து அவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால், மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடமுடியாது என்பது உறுதியாகியுள்ளது. ரபாடா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரபாடா குறித்த இந்த செய்தி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரபாடா திடீர் பயணம்
ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார் ரபாடா. திடீரென எந்தவிதமான தகவலும் இல்லாமல் குஜராத் அணியில் இருந்து விலகிய அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். சொந்த காரணங்களுக்காக ரபாடா தென்னாப்பிரிக்கா சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும் என்ன காரணம் என்ற தகவல் வெளியாகிவில்லை. மர்மமாகவே இருந்தது.
ரபாடா விளக்கம்
இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் சொந்த ஊருக்கு திரும்பியது ஏன் என தென்னாப்பிரிக்க மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் ரபாடா தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஊக்கமருந்து சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தற்காலிகமாக கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ரபாடாவே தெரிவித்துள்ளார். மேலும், இந்த சூழலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ள ரபாடா விரைவில் இந்த கடினமான காலத்தில் இருந்து மீண்டு வருவேன் தெரிவித்துள்ளார்.
ரபாடா வருத்தம்
ராபடா வெளியிட்டிருக்கும் அந்த விளக்க கடிதத்தில், “நான் உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. இது எனது தனிப்பட்ட விருப்பங்களைத் தாண்டியது. நான் ஒரு தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், மேலும் நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன். CSA மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகியோரின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். SACA மற்றும் எனது சட்டக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மிக முக்கியமாக, எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் புரிதலுக்கும் அன்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முன்னோக்கிச் செல்லும்போது, இந்த தருணம் நான் யார் என்பதை நிச்சயமாக வரையறுக்காது. தொடர்ந்து கடினமாக உழைத்து, ஆர்வத்துடனும் பக்தியுடனும் விளையாடுவேன்.” என கூறியுள்ளார். ரபாடா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், ரபாடா சீக்கிரம் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப வேண்டும் என அன்பை அவரது ரசிகர்கள் பரிமாறி வருகின்றனர்.