பரேலி,
உத்தர பிரதேசத்தில் பரேலி பகுதியில் இஜத்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் ரவீந்திர பிரகாஷ் சர்மா என்பவர் பல் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், 2021-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி அவரிடம் பல் வலிக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார்.
அவரிடம் பல் ஒன்றை எடுக்க வேண்டும் என கூறி அதற்கு தயார் செய்ய ஊசி போடுகிறேன் என கூறி மயக்க மருந்து கலந்த ஊசியை டாக்டர் பிரகாஷ் போட்டுள்ளார். இதில் அந்த பெண் மயக்கமடைந்து உள்ளார். இதன்பின்னர் அந்த பெண்ணை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை வீடியோவாகவும் படம் பிடித்து வைத்து கொண்டு, அந்த பெண்ணை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி பெண்ணின் கணவருக்கு தெரிய வந்துள்ளது. அவர், இஜத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்த விசாரணை முடிவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதுபற்றி விரைவு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி மணி, குற்றச்சாட்டுக்கு ஆளான டாக்டர் பிரகாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.