பாஜகவின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

மத்திய பாஜக அரசின் அச்சுறுத்தல்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மதுரையில் ஜூன் 1-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸ்க்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: திமுக அரசின் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், மக்கள் மன்றத்திலும், சட்டத்தின் துணை கொண்டும் திமுக எதிர்கொள்ளும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நமது பலமே திமுகவின் கட்டுமானம்தான். வேறு எந்த கட்சிக்கும் இல்லாத இந்த நிர்வாக கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பிக்கிறோம். புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வரும் தடங்கல்களை உங்கள் உழைப்பால் வெல்ல வேண்டும்.

பாஜக தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதனால் அச்சுறுத்தி, அதிமுகவை அடக்கிவிட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்காவிட்டால் சொந்த கட்சியில் அவரது தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இண்டியா கூட்டணி அமைத்ததில் திமுகவின் பங்கு அதிகம் என்பதால், திமுக மீது பாஜக கோபத்தில் உள்ளது. இதனால்தான் அமலாக்கத் துறையை ஏவிவிடுகிறது. அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் அனைவரும் இனி சென்னையைவிட, மாவட்டங்களில்தான் அதிக நாட்கள் செலவிட வேண்டும். எம்எல்ஏக்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். வெற்றி பெறுபவர், திறமை வாய்ந்தவர் மட்டுமே தேர்தலில் நிறுத்தப்படுவார். வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். அவரை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்கள் கடமை.

வரும் ஓராண்டு காலம் மிக முக்கியமான காலகட்டம். உள்ளூர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். சாதனைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக கொண்டு சேர்க்க வேண்டும். சமூக ஊடக பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 15-20 பேரை நியமிக்க வேண்டும். இதற்கான செலவினங்களை மாவட்ட அமைச்சர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பவளவிழா கொண்டாடிய திமுக, 6-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். கோடிக்கணக்கான திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும்தான் இதற்கு காரணம். மக்களவை தேர்தலை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இதர பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும். நிர்வாகிகள் துரோகம் செய்தால், திமுக மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கும். அது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு செய்யும் மாபெரும் துரோகம். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார்.

இதற்கிடையே, 8 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒன்றிய நிர்வாகிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது, குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மாற்றங்கள் செய்வது, பூத் கமிட்டியை மேம்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட துணை பொதுச் செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தகவல் தொடர்பு பிரிவு தலைவர் டிகேஎஸ். இளங்கோவன் மற்றும் 72 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

துரை​முரு​கன் அறி​விப்​பு: இதனிடையே பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் வெளி​யிட்ட அறி​விப்​பு: திமுக தலை​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் ஜூன் 1-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை காலை 9 மணிக்கு திமுக பொதுக்​குழுக் கூட்​டம், மதுரை உத்​தங்​குடி கலைஞர் திடலில் நடை​பெறும். கழக ஆக்​கப்​பணி​கள் மற்​றும் தணிக்​கைக்​குழு அறிக்​கைகள் தொடர்​பாக நடை​பெறும் இக்​கூட்​டத்​தில் பொதுக்​குழு உறுப்​பினர்​கள் அனை​வரும் தவறாமல் பங்​கேற்​கும்​படி கேட்​டுக் கொள்​கிறேன். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.