போலீஸாரிடம் இருந்து துப்பாக்கிய பறிக்க முயன்ற பாலியல் குற்றவாளிக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசம் போபாலில் இளைஞர்கள் சிலர் கல்லூரி மாணவிகளிடம் நட்பாக பழகி, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அவர்களை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளனர். இதர மாணவிகளை தங்களிடம் அழைத்து வரும்படி வற்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பர்ஹான் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்த குற்றத்தில் தொடர்புடைய அப்ரார் என்பவரை கைது செய்வதற்காக பர்ஹானை போலீஸார் காவலில் எடுத்து ஜீப்பில் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர்.
அப்போது உடல் உபாதை காரணமாக வாகனத்தை நிறுத்தும்படி பர்ஹான் கூறியுள்ளார். அவருக்கு பாதுகாப்பாக எஸ்.ஐ ஒருவர் உடன் சென்றார். அப்போது, எஸ்.ஐ துப்பாக்கியை பர்ஹான் பறிக்க முயன்றார். இதை எஸ்.ஐ தடுத்தபோது, துப்பாக்கியின் டிரிக்கரில் கை பட்டு, குண்டு வெளியேறியது. இதில் பர்ஹானின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. அவர் போபாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பர்ஹான் மீது தற்போது கொலை முயற்சி வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.