Retro: "Kanimaa பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட் உருவான பின்னணி?" – நடன இயக்குநர் ஷெரிஃப் பேட்டி

‘கனிமா’ பாடல்தான் தற்போது ஒட்டு மொத்த மாவட்டங்களிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது.

‘ரெட்ரோ’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் சென்சேஷனல் ஹிட் அடித்திருந்தது.

தற்போது படம் வெளியானதும் அதன் காட்சிகள் பார்வையாளர்களுக்கு இன்னும் பேவரைட்டாகியிருக்கிறது.

‘கனிமா’ பாடல், ஃபைட் சீன், உரையாடல் காட்சி என அத்தனையையும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியாக எடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

Kanima Song – Retro

‘ரெட்ரோ’ படத்தின் நடன இயக்குநர் ஷெரீஃபிடம் இந்தப் பாடல் தொடர்பாக பல விஷயங்களைப் பேசினேன்.

பேச தொடங்கிய அவர், “ரொம்பவே சந்தோஷம். முக்கியமா, படத்துல வர்ற அந்த 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியைப் பற்றி சினிமாவுல இருந்து பலரும் எனக்குக் கால் பண்ணி வாழ்த்துறாங்க.

கார்த்திக் சுப்புராஜ் கதையை வச்சு பாடல், உரையாடல், ஸ்டன்ட்னு பல விஷயங்களை இந்த சிங்கிள் ஷாட்ல சேர்ந்திருந்தாரு.” எனக் கூறியவரிடம் அடுத்தடுத்துக் கேள்விகளை முன் வைத்தோம்.

‘கனிமா’ பாடலுடன் ஃபைட் சீன், உரையாடல் என பல விஷயங்களையும் சிங்கிள் ஷாட்டில் கொண்டு வந்ததுக்கான திட்டமிடல் பற்றி?

சொல்லப்போனால், இந்த ஐடியாவை பற்றி கார்த்திக் சுப்புராஜ் சொன்னதும் எனக்குமே சிங்கிள் ஷாட்ல பண்ணிடலாம்னுதான் தோணுச்சு. நான் இதை ஷூட் பண்றதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஒரு படத்துல நான்கு நிமிடங்களுக்கு ஒரு சிங்கிள் ஷாட் காட்சியை எடுத்திருந்தோம். அதுனால நான் அதையே மறுபடியும் பண்ண வேண்டாம்னு விட்டுடேன். ஆனால், அதுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இதை சிங்கிள் ஷாட்ல பண்ணிடலாம்னு சொன்னாரு. எனக்கு அது சர்ப்ரைஸ்தான். இந்த சிங்கிள் ஷாட்ல பாடல் மட்டுமல்ல, ஃபைட் சீன், உரையாடல் காட்சிகளும் இருக்கு. எவராவது ஒருவர் தப்பு பண்ணினாலும் மறுபடியும் முதல்ல இருந்து எடுத்தாகணும். திட்டமிட்ட விஷயங்கள் அனைத்துமே சரியாகக் கைகூடி வந்தால் மட்டுமே இந்த சிங்கிள் ஷாட் சாத்தியம். சில முயற்சிகளுக்குப் பிறகு இந்த சிங்கிள் ஷாட் காட்சியை சாத்தியப்படுத்தினோம்.

Sherif - Retro Choreographer
Sherif – Retro Choreographer

இதை சாத்தியப்படுத்துவதில் உங்களுக்கு என்னென்ன சவால்கள் இருந்தது?

கார்த்திக் சுப்புராஜ் எப்போதுமே ஒரு விஷயத்தை நம்மகிட்டையே கொடுத்து கொஞ்சம் வொர்க் பண்ணச் சொல்லுவாரு. அவருடைய திரைப்படங்கள்ல அதிகமாக சிங்கிள் ஷாட் இருக்கும். ‘மகான்’ படத்திலேயே ஒரு சிங்கிள் ஷாட் எடுத்திருப்போம். பிறகு இந்த திரைப்படத்திற்கும் சிங்கிள் ஷாட் ஐடியாவை கார்த்திக் சொன்னாரு. அதுக்கப்புறம் படப்பிடிப்பு தளத்தை முழுமையாக் கவனிச்சு ஒரு மேப் கொடுத்தாங்க. அதுல கார்த்திக் சுப்புராஜ் சொன்ன மாற்றங்களுக்கேற்ப டான்ஸர்ஸ் நிற்க வேண்டிய இடங்கள்ல மார்க் வச்சிட்டோம். அதுவுமே கேமராவின் நகர்வுகளுக்கேற்ப திட்டமிட்டு பண்ணினோம். அதை பின்பற்றிதான் ஷூட் பண்ணி அவுட்புட் கொண்டு வந்தோம்.

மொத்தமாக எத்தனை நாள்கள் இந்த சிங்கிள் ஷாட்டை ஷூட் பண்ணினீங்க?

3 நாட்கள்ல டேக் எடுக்கிறதுக்கு முதல்ல பிளான் பண்ணினோம். முதல் நாள் காஸ்டியூம் இல்லாமல் ரிகர்சல் மாதிரி பண்ணியிருந்தோம். இரண்டாவது நாள் ஆர்டிஸ்ட் மட்டும் காஸ்டியூம் இல்லாமல் ரிகர்சல் பண்ணினோம். இந்த ரிகர்சல் காலையிலிருந்து மாலை வரைக்கும் நடந்துகிட்டேதான் இருக்கும். இரண்டாவது நாள் மாலைக்கு மேல காஸ்டியூமோட ஷூட் பண்ணினோம். அந்த ஷூட் நைட் 2 மணி வரைக்கும் நடந்தது. அன்னைக்கு எடுத்தது எங்களுக்கு முழு திருப்தியைக் கொடுக்கல. அதுல சில தவறுகள் எங்களுக்கு தெரிஞ்சது. அதுல யார் தவறு பண்ணினாங்களோ அவங்களுக்குத் தனியாக ஒரு மீட்டிங் வச்சுப் பேசினோம். நைட் சாங்குகிறதுனால மூன்றாவது நாள் மாலையிலதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அன்னைக்கும் படப்பிடிப்பு இரவு 2 மணி வரைக்கும் நடந்தது. மொத்தமாக, இந்த சிங்கிள் ஷாட் காட்சியை ஒரு 25 டேக் முயற்சிகளுக்குப் பிறகு சாத்தியப்படுத்தினோம். ஒரு முக்கியமான விஷயமும் இதுல இருக்கு. ஆமா, இந்த 25 டேக் முயற்சிகளிலும் சூர்யா சார் இருந்தாரு!

Sherif - Retro Choreographer
Sherif – Retro Choreographer

இந்த சிங்கிள் ஷாட் காட்சியில அவர் எவ்வளவு ஈடுபாட்டோடு இருந்தாரு?

படத்துக்காக எப்போதும் அவர் சிரிக்காம கம்முனு இருப்பாரு. ஆனால், செட்டைவிட்டு வெளிய போனதும் எங்ககிட்டு சிரிச்சுப் பேசுவாரு. மறுபடியும் செட்டுக்குள்ள வந்ததும் சிரிக்காமல் இருப்பாரு. நான்கூட முதல்ல நம்முடைய டான்ஸ் ஸ்டெப் பிடிக்கலைன்னு இப்படி இருக்காரோன்னு நினைச்சேன். ஆனால், அப்புறம்தான் கதாபாத்திரமே அப்படிதான்னு விஷயம் புரிஞ்சது. அவருமே என்னுடைய டான்ஸ் ஸ்டைல் கொண்டு வர்றதுக்கு கஷ்டமாக இருக்குன்னு சொன்னாரு. மூன்றாவது நாள் எடுக்கும்போது நாங்களெல்லாம் ரொம்ப களைத்துப் போய் உட்கார்ந்திருந்தோம். ஆனால், அவர் இன்னொரு டேக் போகலாம்னு ஜாலியாக வந்தாரு. சிங்கிள் ஷாட்ல எடுத்த அந்த களத்தின் ரியாலிட்டியை சொல்ல முடியும். கார்த்திக் சுப்புராஜ் படங்களிலும் இதுபோன்ற ஒரிஜினாலிட்டி இருக்கும். திரையரங்குகள்ல மக்களுக்கு இந்த ஷாட் முழுமையான அனுபவத்தைக் கொடுத்திருக்கு. அந்த ஷாட் இருந்திருக்க வேண்டாம்னு மக்களுக்கு நாங்க எண்ணத்தை ஏற்படுத்தல. அதுதான் எங்களுடைய சக்சஸ்!

‘கனிமா’ பாடலில் வரும் அந்த ஹூக் ஸ்டெப் ஐடியா எப்படி வந்தது?

சொல்லப்போனால், அந்த ஸ்டெப் பிரமாண்டமான கோரியோகிராஃபினால ஹிட்டாகல. அது எல்லோரும் ஆடக்கூடிய க்யூட்டான நடனம். அதுதான் மக்களை கவர்ந்திருக்கு. ரெஃபரென்ஸ் எடுத்து வேலை பண்ணினால் அதுல ஒரிஜினாலிட்டி இல்லாமல் போகுதுன்னு நான் நினைக்கிறேன். அதுபோலவே, திருமணத்துல ஆடுற மாதிரி எளிமையாக் இருக்கணும். இதெல்லாம் வச்சு யோசிச்சதுதான் நீங்க பார்க்கிற அந்த ‘கனிமா’ ஹூக் ஸ்டெப். இதுக்கப்புறம் சூர்யா சார் போடுற அந்த குத்து டான்ஸ் நாங்க யதார்த்தமாக வச்சதுதான். அதுக்குப் பிறகுதான் இதே மாதிரி ஸ்டெப் சூர்யா சார் எங்கோ ஆடின மாதிரி இருக்குனு எங்களுக்கு தோணுச்சு. ஆனால், ரெஃபரென்ஸ் வைக்கணும்னு திட்டமிட்டுப் பண்ணினது கிடையாது அது.

Sherif - Retro Choreographer
Sherif – Retro Choreographer

சந்தோஷ் நாராயணனை நடனமாட வச்சது எப்படி?

அது கார்த்திக் சுப்புராஜுடைய கால்தான். அவருமே நடனமாடுறதுக்கு ஆர்வமாகதான் இருந்தாரு. அவர் ஜாலியாகதான் இருப்பாரு. சில சமயங்கள்ல ‘சாரி, நான் இது மாதிரி பண்ணிக்கவா’னு கேட்பாரு. ‘பாடல் உங்களுடைய வைப், உங்களுக்கேத்த மாதிரி பண்ணுங்க’னு சொல்வேன். இன்னும் கொஞ்ச நாள் போனால் மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி சென்னைல கான்ஸர்ட் வச்சு பண்ணிடுவாரு (சிரிக்கிறார்). ஆனால், இப்படியான விஷயம் நடன துறைக்கும் இசை துறைக்கும் ஆரோக்கியமானது!

Sherif - Retro Choreographer
Sherif – Retro Choreographer

‘லவ் டிடாக்ஸ்’ பாடல் உருவானது பற்றி?

ஸ்ரேயா மேமை நான் டான்ஸராக இருந்த நேரத்திலேயே அவங்களுடைய டான்ஸைப் பார்த்து ரசிச்சிருக்கேன். இந்தப் படத்தோட படப்பிடிப்புக்கு நாங்க வெவ்வேறு பகுதிகளுக்கு போகுற சமயத்திலெல்லாம் மழையும் எங்களை பின்தொடர்ந்தே வந்தது. ‘லவ் டுடேக்ஸ்’ பாடலை நாங்க ஊட்டில ஷூட் பண்ணினோம். அன்னைக்கு பயங்கரமான காற்று அடிச்சது. ஷ்ரேயா மேம், டான்ஸர்ஸெல்லாம் மெதுவான காஸ்டியூம்தான் அணிந்திருந்தாங்க. குளிர் அவங்களுக்கு பயங்கரமாக இருந்தது. ஷூட்டிங் ப்ரேக் கொடுத்துட்டு போகிற மாதிரியான சூழல் இருந்தது. ஆனால், ஷ்ரேயா மேம் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்து பண்ணிக் கொடுத்தாங்க.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.