STR 49: `அவர் இமேஜ் பாதிக்காம இருக்கணும்' – சிம்பு சொன்ன கண்டிஷன்; சந்தானம் இணைந்து இப்படித்தான்

சிலம்பரசன் டி.ஆர், சந்தானம் இணையும் STR 49 படத்தின் பூஜை, சமீபத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சந்தானம் இணைந்திருப்பது பலருக்குமான ஆச்சர்ய சர்ப்ரைஸ். இதுகுறித்து விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் பிரத்யேகமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தார்.

சிம்பு

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் சிலம்பரசன் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இது சிம்புவின் 48வது படம். இதனையடுத்து ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘எஸ்.டி.ஆர்.49’. இதனையடுத்து சிலம்பரசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் 50வது படமாகவும், ‘டிராகன்’ அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் ‘எஸ்.டி.ஆர்.51’வது படமாகவும் உருவாகிறது.

இந்நிலையில் ‘STR 49’ காலேஜ் பின்னணியில் gen z கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ்.டி.ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ளும் கலக்கலான கமர்ஷியல் ஆக்ஷன் படமாகவும், முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும் என்கிறார்கள். இதில் கல்லூரி மாணவராக நடிக்கிறார் சிலம்பரசன். அவருடன் அதிரடியாய் சந்தானம் இணைந்திருக்கிறார். தவிர ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கூட்டணியான விடிவி கணேஷும் இணைந்துள்ளார். ஹீரோயினாக கயாடு லோஹர் கமிட் ஆகியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு என பக்காவான டீமும் இணைந்துவிட்டது.

படபூஜையில்..

‘மதகஜராஜா’வின் வெற்றிக்கு சந்தானத்தின் காமெடிக்கும் பெரிய பங்கு என்பதால், தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் கவனம் முழுவதும் சந்தானம் பக்கம் திரும்பியது. ஆனால், அவரோ ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தை முடித்துவிட்டு, அடுத்தும் சோலோ ஹீரோவாக படத்தில் கமிட் ஆனார். அதன் வேலைகளுக்கு இடையே தான் சிம்புவின் படத்திற்குள் வந்திருக்கிறார். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்தான் `சந்தானம் வேண்டும்’ என விரும்பியிருக்கிறார்.

அவர் சிம்புவிடம் கதை சொல்லும்போதே, ‘உங்களுடன் சந்தானமும் இணைந்து நடித்தால் சூப்பராக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். ஆச்சர்யமான சிம்பு, உடனே சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘சந்தானம் இப்போ ஹீரோவாக கலக்குறார். அவரை என்னுடன் நடிக்கக் கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பார். அதே சமயம், என் படத்தில் அவருக்கு பலம் சேர்க்கிற மாதிரியான முக்கிய கதாபாத்திரமாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால் நானே அவரைக் கூப்பிடுறேன்.” என்ற நிபந்தனையோடு தான் சந்தானத்தை அழைத்திருக்கிறார். சந்தானத்தின் கதாபாத்திரம், அவரது ஹீரோ இமேஜை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிறார்கள்.

சந்தானம்

இந்தப் படத்துக்கு வந்தது குறித்து சந்தனாம் நம்மிடம் சொன்னது இது. ”ஒருநாள் சிம்பு எனக்கு போன் செய்து, ‘படம் ஒண்ணு பண்றேன். அதுல நீங்களும் நடிக்கணும்’னு கேட்டார். அவர் கேட்டார்னா ‘yes’ தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்லமுடியாது. அப்படிப்பட்ட இடத்துல அவரை வச்சுருக்கேன். சிம்பு எப்போது கேட்டாலும் ‘நோ’ சொல்லமாட்டேன். அவருக்கு ஒன்லி யெஸ் தான். என்னோட ஆரம்பத்துல இருந்து அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். ஏன்னா, அவர் படத்திற்குக் கேட்ட சமயத்தில் நானும் அடுத்து ஒரு படம் தொடங்குறதுக்கான வேலைகள்ல மும்முரமா இருந்தேன். அந்தத் தயாரிப்பாளரிடம் ‘சாரி’ கேட்டுட்டு, இப்ப சிம்பு படத்துக்கு வந்துட்டேன். எங்கள் அதிரடியையும் எதிர்பாருங்கள்.” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார்.

சிம்புவோடு

இப்போது படப்பூஜையும் நடந்திருப்பதால், அடுத்து எப்போது படப்பிடிப்பு என்ற பேச்சு இருக்கிறது. இந்த வாரம் தொடங்கி, ‘தக் லைஃப்’ ரிலீஸ் வரை அதன் புரொமோஷன் வேலைகளில் பறக்கவிருக்கிறார் சிலம்பரசன். அதனை முடித்துவிட்டு ஜூன் இரண்டாவது வாரத்தில் ‘எஸ்.டி.ஆர்.49’படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.