அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அல்காட்ராஸ் சிறைச்சாலையை புனரமைத்துத் திறக்க உத்தரவிட்டுள்ளேன். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும். சிறையைத் திறக்க சிறைத்துறை, நீதித்துறை, எஃப்பிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சிறைச்சாலை அமெரிக்கா மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை சிறைவைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது இந்த அல்காட்ராஸ் சிறை. 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த சிறைச்சாலை, 1963-ம் ஆண்டு இந்த சிறைச்சாலை மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ள சிறு தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலத்துக்கு அருகே இது அமைந்துள்ளது. பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தத் தீவில் படம்பிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.