ஆந்திராவில் பலத்த மழை: மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலத்தில் கத்திரி வெயில் தொடங்கிய அன்றே அதிகாலை முதல் இரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. மேலும் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இந்த மழை பல மாவட்டங்களில் தொடர்ந்தது. பலத்த காற்றுக்கு பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன.

பலத்த மழையால் பல மாவட்டங்களில் பயிர்கள் நாசமடைந்தன. மாங்காய்கள் கொட்டியதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது. மேலும் வாழை, பப்பாளி, சோளம் போன்ற பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் ஆந்திராவில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். திருப்பதி மாவட்டத்தில் 3 பேரும், பிரகாசம் மாவட்டத்தில் 2 பேரும், கிருஷ்ணா, ஏலூரு மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்னர். இதுதவிர ஏலூரில் மரம் முறிந்து விழந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். காகிநாடா மாவட்டம் காஜலூருவில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பெய்தது. சித்தூர், திருப்பதி, பிரகாசம், குண்டூர், கோதாவரி மாவட்டங்களில் நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. திருமலையில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருவதால் பக்தர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.