புதுடெல்லி: இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. இதனை பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் பிஸ்டார்மரும் ஒருமித்து வரவேற்றனர். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கும்; புதுமை கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினர்கள். இரட்டை பங்களிப்பு மாநாட்டுடன் ஒரு லட்சிய மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றிகரமான முடிவை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இரு நாட்டுப் பொருளாதாரங்களிலும் வர்த்தகம், முதலீடு, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இருதரப்பு விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மையில் இது ஒரு வரலாற்று மைல்கல் என்று தலைவர்கள் விவரித்தனர். உலகின் இரண்டு பெரிய மற்றும் வெளிப்படையான சந்தை பொருளாதாரங்களுக்கு இடையிலான மைல்கல் ஒப்பந்தங்கள் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், பொருளாதார இணைப்புகளை வலுப்படுத்தும் என்றும் மக்களிடையே உறவுகளை மேம்படுத்தும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இது உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களுடன் கூட்டணிகளை வலுப்படுத்துவதும், வர்த்தக தடைகளைக் களைவதும் வலுவான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரத்தை வழங்குவதற்கான மாற்றத்துக்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறினார். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்துவது அதிகரித்து வரும் வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கூட்டாண்மைக்கு ஒரு முக்கிய அம்சமாக இது உள்ளது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தகத்தை உள்ளடக்கிய ஒரு சமநிலையான, சமமான மற்றும் லட்சியமான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முடிவு, இருதரப்பு வர்த்தகத்தை கணிசமாக மேம்படுத்தும். வேலைவாய்ப்புக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மற்றும் இரு நாடுகளிலும் உள்ள குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது, இரு நாடுகளும் உலகளாவிய சந்தைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கூட்டாக உருவாக்குவதற்கான புதிய ஆற்றலையும் உருவாக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியா – இங்கிலாந்து இடையேயான விரிவான உத்தி சார்ந்த கூட்டாண்மையின் வலுவான அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது. மேலும் ஒத்துழைப்பு மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்திற்கு வழி வகுக்கிறது.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்புகொள்ள ஒப்புக்கொண்டனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.