கோவை: “கொங்கு பகுதியில் தோட்டத்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என சிவகிரி சம்பவத்தை முன்வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மே 6) நடந்தது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியர் கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் தோட்டத்தை காலி செய்து வெளியூர் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல்லடம், சிவகிரி இரண்டு சம்பவங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. கொங்கு பகுதியில் இனி தோட்டத்து பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்பட விடுமுறைக்கு வந்தவர்களைக் கூட திருப்பி அனுபப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. யார் வழக்கு தொடுக்கிறார்களோ அவர்களை முதலில் கைது செய்வதை திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. மதுரை ஆதீனம் விவகாரத்திலும் அதே நடந்துள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டதால் சிறுபான்மையினர் வாக்கு பாதிக்கப்படாது. கூட்டணி குறித்து வரவேற்று பேசியதற்காக ஐக்கிய ஜமாத் அமைப்பு அதிமுக நிர்வாகியான அப்துல் ஜப்பார் ஜமாத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை போல் சிறுபான்மையினர் பலர் ஆதரவாக வாக்களிப்பார்கள்,” என்று அவர் கூறினார்.