ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.
இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள்.
‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்

அறிமுகப்படுத்தியது சென்னை டி.டி இல்லீங்க!
பாத்திமா பாபு. இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தூர்தர்ஷனில் இவர் செய்தி வாசித்ததுதான் நினைவில் வரும். ‘செய்தி வாசிப்பாளர்’ என்கிற அளவில் இவரைச் சுருக்குவது தவறு.
நாடகம், சீரியல், சினிமா நடிகை, குரல் கலைஞர், கதை சொல்லி என இவர் இயங்கிய, இயங்கிக் கொண்டிருக்கும் தளங்களின் பட்டியல் நீளம்.
சரி, மக்கள் மத்தியில் பிரபலமான இவரது அந்தச் செய்தி வாசிப்பு நாட்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமா?
இந்த இடத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் இருக்கின்றன. தமிழில் அழகாகச் செய்தி வாசிக்கிறார் என இவரைக் கொண்டாடியவர்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும் இவரது தாய்மொழி மலையாளம் என்று.
பாத்திமா படித்ததும் ஆங்கில வழிக் கல்வியே. தமிழை இரண்டாவது மொழியாக எடுத்திருந்தாராம். ஆனால் அந்த இரண்டாவது மொழியை இவருக்குக் கற்றுத் தந்த இவரது தமிழாசிரியர்கள்தான் இவருக்குத் தமிழ் மீது பாசம், நேசம், ஆர்வம் எல்லாம் உண்டாகக் காரணம்.
இதைத் தன்னுடைய பல நேர்காணல்களில் பேசியுள்ளார் பாத்திமா.
அதே போல இவரது முதல் செய்தி வாசிப்பு சென்னை தூர்தர்ஷனில் இல்லை. புதுச்சேரி தூர்தர்ஷனில்தான் தொடங்கியது.
இது குறித்துக் குறிப்பிடும் பாத்திமா, ‘புதுச்சேரி தூர்தர்ஷனில் குரல் கலைஞரா தேர்வாகி இருந்தேன். அந்தச் சமயத்துல ஒருநாள் நிலையத்துல வழக்கமா செய்தி வாசிச்சிட்டிருந்தவர் கடைசி நேரத்துல வர முடியாத ஒரு சூழல் அமைய, என்னைக் கூப்பிட்டு அன்னைக்குச் செய்தியை வாசிக்கச் சொன்னாங்க. அது நேரலை. அதுதான் நான் வாசிச்ச முதல் செய்தி.

தினத்தந்தி பேப்பரில் என் போட்டோ!
வாசிச்சு முடிஞ்சதும் அங்க இருந்த ஒருத்தர், ‘உங்க உச்சரிப்பு நல்லா இருக்கே, நீங்க ஏன் செய்தி வாசிப்பாளராக முயற்சிக்க கூடாது’னு கேட்டார். அந்த வார்த்தைகளே என்னை புதுச்சேரியிலிருந்து சென்னைக்குக் கூட்டி வந்திச்சு’ என்கிறார்.
சென்னை தூர்தர்ஷனில் இவரது பயணம் தொடங்கியது 1987ம் ஆண்டு.
”நல்லாவே ஞாபகம் இருக்கு. அந்த வருஷம் ஜூலை 1-ம் தேதி. முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசித்தேன். மறுநாளே `தினத்தந்தி’ பேப்பரில் கால் பக்க அளவுக்கு, என்னைப் பத்தி செய்தியே போட்டாங்க.
‘சென்னை தொலைக் காட்சி நிலையத்தில் புதிய முகம் அறிமுகம்’கிற டைட்டில்ல. பேப்பர்ல வர்றதுன்னா அப்பெல்லாம் பெரிய பெருமைனு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அங்க செய்தி வாசிச்ச நாட்கள்ல எனக்குக் கிடைச்ச வரவேற்பு பத்திச் சும்மா சொல்லக் கூடாது. திகட்டத் திகட்ட அன்பைத் தந்தாங்கனு சொல்லலாம்.
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்ங்கிற ஒரு போட்டோகிராஃபர் எனக்குத் தீவிர ரசிகராகிட்டார். நான் செய்தி வாசிக்கிறதைப் போட்டோ பிடிச்சு தன்னுடைய ஸ்டூடியோவில் ஃபிரேம் போட்டு வச்சிருந்தார். அவர் எனக்குப் பரிசளித்த என் புகைப்படங்கள் இன்னைக்கும் எங்க வீட்டில் இருக்கு.
தவிர, என் கல்யாணத்துக்கே அவர்தான் புகைப்படக் கலைஞர். இவரை மாதிரி கிடைச்ச ரசிக நண்பர்கள் ஏராளம். அதுல சிலர் இப்ப வரை தொடர்புலயே இருக்காங்க.
ஒரு ரசிகர் ஏலக்காயை எனக்கு அனுப்புவார். துபாயிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு தமிழ்க் குடும்பத்தினர் என்னைச் சந்திச்ச நினைவுகள் இப்ப வரை நினைவுல இருக்கு.
அன்னைக்கு தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத காலம்கிறதால கொஞ்ச நேரம் டிவியில் முகம் வந்தாலே கொண்டாடினாங்க ஜனங்க.
பொது இடங்கள்ல எங்களைப் பாத்தா ஆட்டோகிராப் கேட்பாங்க. அவங்க வீட்டுல ஒருத்தரா நினைச்சு நலம் விசாரிப்பாங்க. தங்களுடைய வீட்டுக்குக் கூப்பிடுவாங்க.. அதெல்லாம் ஒரு பொற்காலம்னே சொல்லலாம்” எனத் தன் தூர்தர்ஷன் காலத்தை அத்தனை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஆரம்பகாலத்தில் மேடை நாடகம், பிறகு செய்தி வாசிப்பு என இருந்தவரை சினிமாவுக்குக் கூட்டி வந்தது கே.பாலச்சந்தர். ‘கல்கி’ படத்தின் மூலமே இவரது திரைப்பிரவேசம் நிகழ்ந்தது.

இப்போ வேகம் கூடியிருக்கு..
தொடர்ந்து ‘நீ வருவாய் என’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் மேடை நாடகங்களிலிருந்து முழுவதுமாக விலகாதபடி பார்த்துக் கொண்டார்.
இதற்கிடையில் சீரியல் வாய்ப்புகளும் வரத் தொடங்கின. அழகான செய்தி வாசிப்பாளரை அதகளம் செய்யும் வில்லியாகக் காட்டின அவை.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நோ மோகினி’ சீரியலில் இவர் நடித்த நெகடிவ் கதாபாத்திரம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து சமீபமாக டிவி ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிடித்துப் போன ஒரு ரியாலட்டி ஷோவாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் ஒரு போட்டியாளராக வந்தார்.
மேடை, டிவி,, சினிமா, என பயணித்த இவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
‘மேடை, டிவி, சினிமா எதையும் விடலையே. பசங்கெல்லாம் வளர்ந்து வீட்டுப் பொறுப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கறதால முன்னை விட கூடுதல் வேகம் வந்திடுச்சுனு கூடச் சொல்லலாம்’ என்கிறார்.

வீட்டுக்குள்ளே ஒரு கூடு!
கடந்த மே முதல் நாளன்று கூட இவர் இயக்கிய ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ நாடகம் சென்னை நாரதகான சபாவில் அரங்கேறியது.
சீரியல், சினிமாவைப் பொறுத்தவரை முக்கியத்துவம் இருக்கும் கேரக்டர்கள் என்றால் சம்மதம் சொல்லி விடுகிறாராம்.
நடிப்பு தாண்டி ஆடியோக்களுக்கு குரல் கொடுக்கும் பணியையும் ஒருபக்கம் செய்து வருகிறார்.
எல்லாவற்றிற்கும் மேல் தனது வீட்டிலேயே ‘கூடுகை’ என்கிற ஒரு நிகழ்வை தற்போது நடத்தி வருகிறார்.
நட்பு வட்டத்தினர், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்தக் கூடுகை நிகழ்வில் கூடி, கலை, இலக்கியம், சினிமா, நாட்டு நடப்பு என அந்த அரங்கையே நல்லதொரு உரையாடல் களமாக மாற்றி வருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs