சென்னை: ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், சிங்கப்பூரை போல் ஒரே மாதிரியான வரி இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது:
ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது 5, 12 ,18 மற்றும் 28% என நான்கு ஸ்லாப்புகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக சிங்கப்பூரில் இருப்பது போல ஒரே ஸ்லாப்பாக அதாவது 8 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி இருக்க வேண்டும். இதற்காக பாமக தொடர்ந்து போராடும்.
மருத்துவம் போல வணிகமும் ஒரு சேவை ஆகும். தமிழகத்தில் வணிகர்கள் பாதுகாப்பாக வியாபாரம் செய்வதற்கு பாமக துணை நிற்கும். எந்த பிரச்சனை வந்தாலும் பாமக உதவும். மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும்.
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி இந்த மாநாட்டை நடத்துகிறோம். தமிழகத்தில் எஸ்சி பிரிவினருக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில், 78 உட்பிரிவுகள் உள்ளது. எந்தெந்த பிரிவினர் அதிக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள்.
யார் குறைந்த இட ஒதுக்கீட்டை பெறுகிறார்கள்என கண்டறிய தமிழக அரசு சாதி சர்வே எடுக்க வேண்டும். குறைவாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் சமூகங்களை கண்டறிந்து, அவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தால் தான் அவர்களும் முன்னேறுவார்கள். தமிழக அரசு சாதிவாரி கணக்கீடு எடுத்தால் மட்டுமே எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.