தம்பதி கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம்: அண்ணாமலை

ஈரோடு: ‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி – பாக்கியம் ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, பாஜக சார்பில் சிவகிரியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நாமக்கல் குப்பிச்சிபாளை யம், சென்னிமலை முருங்க தொழுவு, பல்லடம் கள்ளக் கிணறு, சோமலைகவுண்டன் பாளையம் என பல்வேறு இடங்களில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாத தால், காவல்துறை மீதான மரியாதை குறைந்து வருகிறது கடந்த 3 ஆண்டுகளில், தமிழகத்தில் 1,319 பாலியல் வன்கொடுமைகள், 4,949 பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குற்றங்கள், 16,518 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன.

சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் திறன் இந்த ஆட்சிக்கு இல்லை. திறமையான, தகுதியான இரும்புக்கரம் கொண்டு இவற்றை அடக்கும் முதல்வர் வேண்டும் என்பதற்காக, எப்போது தேர்தல் வரும் என மக்கள் காத்திருக்கின்றனர். சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த இரு வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். நீதி கிடைக்கும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும்.

கொங்கு மண்டலத்தில் இதே பாணியில் நடந்துள்ள 4 கொலை வழக்குகளையும் ஈகோ பாராமல் சிபிஐ வசம் ஒப்படைக்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு ஒரே நாளில் இரு அமைச்சர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 13 அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.

இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு, தமிழக அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. நாடு முக்கியம் என்று முதல்வர் கருதி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கொலை நடந்த மேகரையான் தோட்டத்துக்கு சென்ற அண்ணாமலை, கொலையான தம்பதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் மொடக் குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்: இதனிடையே வயதான தம்பதியை கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து ஈரோடு விளக்கேத்தி நான்கு சாலை சந்திப்பில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.