புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 3 நீதிபதிகளைக் கொண்ட குழு தங்களது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லியில் உள்ள இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தபோது கட்டுக் கட்டாக பணத்தை கைப்பற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீதிபதி வர்மா சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கார்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. இந்த நிலையில், தனது விசாரணையை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அந்த குழு வழங்கியுள்ளது.