'மிகவும் மோசமான அனுபவம்..'- இந்திய ரெயில் பயணம் குறித்து அமெரிக்க சுற்றுலா பயணி வீடியோ

லக்னோ,

அமெரிக்காவை சேர்ந்த நிக் மேடாக் என்பவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிக் மேடாக், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

இந்த பயணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டார். அதில், அவர் பயணம் செய்த ரெயிலில் கழிவறை மோசமான நிலையில் இருப்பதாக கூறியிருந்தார். தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இந்தியாவில் ரெயில் பயணம் மேற்கொண்டு 3 நாட்களுக்கு பிறகு தனக்கு மூச்சுக்குழாய் தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது பூட்டானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “நான் இந்தியாவை நேசிக்கிறேன். அன்பான மக்களும், எல்லையில்லா அழகு வாய்ந்த நிலப்பரப்புகளும், வளமான மற்றும் புனிதமான வரலாறும் இந்தியாவிடம் உள்ளன.

அதே சமயம் வாரணாசியில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு எனது 15 மணி நேர ரெயில் பயணம் (3-ம் வகுப்பு ஏ.சி.யில்) எனது 6 வருட பயணத்தில் நான் பார்த்த மிக மோசமான விஷயங்களில் ஒன்றாகும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனது உடல்நலம் தற்போது சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரது பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் நிக் இவ்வாறு பதிவு வெளியிட்டுள்ளார் என்று சிலர் விமர்சித்துள்ளனர். அதே சமயம், விமர்சனங்கள் வரும்போது அவற்றை எதிர்கொண்டு குறைகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.