ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏடிபி) இயக்குநர் ஜெனரல் ரவி பிரகாஷ் மெஹர்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரவீந்திர குமார் என்பவர் கரவுலி மாவட்டம் தொடாபிம் நகருக்கு அருகே சுரங்கம் நடத்தி வருகிறார்.
இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுபப் போவதாகவும் பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ ஜெய்கிரிஷ் படேல் (37) ரவீந்திர குமாரிடம் தெரிவித்துள்ளார்.
கேள்வி கேட்பதை தவிர்க்க வேண்டுமானால் ரூ.10 கோடி தர வேண்டும் என கேட்டுள்ளார். பேச்சுவார்த்தையில் ரூ.2.5 கோடி தர ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ரவீந்திர குமார் எங்களிடம் புகார் தெரிவித்தார். எங்கள் ஆலோசனையின் பேரில், ஜெய்ப்பூரில் உள்ள எம்எல்ஏ விடுதியில் படேலை சந்தித்து ரூ.20 லட்சத்தை லஞ்சமாக வழங்கி உள்ளார் குமார்.
அப்போது பணத்தைப் பெற்ற படேலை ஏடிபி அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். ஜெய்கிரிஷ் படேல் பன்ன்ஸ்வாரா மாவட்டம் பகிதோரா தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ளார். இது தொடர்பாக இடைத்தரகர் விஜய் குமார் படேலும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.