புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெறுகின்றன. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 259 இடங்களில் நடைபெறும் இந்த ஒத்திகைகளுக்கான முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளையொட்டி, நாடு தழுவிய அளவில் சிவில் பாதுகாப்பு தயார் நிலையை மதிப்பிடுவதற்கும், ஒருங்கிணைப்பதற்குமான முக்கியமான கூட்டத்துக்கு உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலத் தலைமைச் செயலர்களும், சிவில் பாதுகாப்புத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஒத்திகைகளில், கடந்த 2010-ம் ஆண்டு அறிவிப்பின்படி 244 நியமிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்கள் ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அமைந்துள்ளன. இங்கு பல்வேறு ஆபத்து சூழ்நிலைகளை உருவகப்படுத்தும் ஒத்திகைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அவசர காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதனிடையே, இன்றே பல இடங்கள் ஒத்திகைகளுக்கு தயாராகிவிட்டன. லக்னோவில் போலீஸ் லைனில் ஒத்திகைகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாளை நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. சிவில் பாதுகாப்பு அமைப்பு, போலீஸார் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் இன்று அதற்கான முன்தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
சிவில் பாதுகாப்பு தலைமை வார்டன் அமர்நாத் மிஸ்ரா கூறுகையில், “நாங்கள் ஒரு கட்டுப்பாடான குழு. எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று எங்களுக்குத் தெரியும். குண்டுவீச்சு அச்சுறுத்தல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்குவோம். திறந்த வெளியில் நிற்கும்போது எப்படி பாதுகாப்பான இடத்துக்குச் செல்வது, வீட்டில் இருக்கும்போது எவ்வாறு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து பதுங்குவது என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்குவோம்” என்று தெரிவித்தார்.
போர்க்கால பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை குறித்து, கர்நாடகாவின் அவசரகால குழுவின் அதிகாரியும், சிவில் பாதுகாப்பின் கூடுதல் தலைவருமான பிஆர்எஸ் சேத்தன் கூறுகையில், “உள்துறை அமைச்சகத்துடன் இன்று காலை நடந்த கூட்டத்தில் எங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில் 32 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளுக்காக தயார் நிலையில் உள்ளன” என்றார்.
இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டால் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். மேலும், அதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டன.
1971-க்குப் பிறகு… – கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 1971-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகள் நடத்தப்பட்டன. அதன்பின், அத்தகைய ஒத்திகைகள் நடைபெறப்போவது இதுதான் முதல் முறை.
ஒத்திகை எப்படி நடக்கும்? – போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். குறிப்பாக, போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
இரவில் மின்சாரத்தை துண்டித்து வெளியே தெரியாத வகையில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிற்பபு பயிற்சி வழங்க வேண்டும். எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது
ஜம்மு – காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதாள பதுங்கு அறைகளை ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி வைத்திருக்கின்றனர். இதேபோல பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியை ஒட்டிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது. வாகனங்களின் முகப்பு விளக்குகளைகூட ஒளிரச் செய்யக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதை எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.