புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
6 பேர் உயிரிழப்பு: இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் கவனிப்பு: இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி நேற்றிரவு மூலம் கவனித்து வருகிறார். பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இணைந்து பிரதமர் மோடி கவனித்தார்.
அமித் ஷா வரவேற்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் பதிலடி. இந்தியக் குடிமக்கள் மீதான எவ்வித தாக்குதலுக்கும் மோடி அரசு சரியன பதிலடி கொடுக்கும் உறுதியோடு இருக்கிறது. பயங்கரவாதத்தை அதன் வேரோடு அழிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி, கார்கே வரவேற்பு: ஆபரேஷன் சிந்தூருக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். “இந்திய ராணுவத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ராணுவத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத கூடாரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பாஹல்காம் தாக்குதல் நடந்த நாள் முதலே அரசின் நடவடிக்கைகளுக்கும், ராணுவத்துக்கும் துணை நிற்கும் என்றே காங்கிரஸ் தெரிவித்து வந்துள்ளது. இந்தத் தருணத்தில் தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடுமே அவியம். அதற்கான வழிகாட்டுதலை நம் தலைவர்கள் நமக்கு முந்தையை காலங்களில் காட்டியுள்ளனர். தேச நலனே அனைத்திலும் பிரதானம்.” என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் கருத்து: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா கட்டவிழ்த்துள்ள நிலையில், “இந்தப் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேபோல் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
அடுத்தது என்ன? சிந்தூர் தாக்குதலுக்கு அடுத்தது என்ன என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பதிலடியை எதிர்கொள்வது குறித்து பாதுகாப்பு துறை விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறுகிறது.
அதேபோல் காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா தலைமையில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாது நாடு முழுவதுமே டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.