பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.
மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Live Updates
-
7 May 2025 10:39 AM IST
காஷ்மீர் மக்கள் அச்சப்பட வேண்டாம் – உமர் அப்துல்லா
தீவிரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் யாரும் காஷ்மீரை விட்டு வெளியேறத் தேவையில்லை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
7 May 2025 10:31 AM IST
பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது – சீனா
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளை குறிவைத்து இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது. பதட்டங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு இரு நாடுகளையும் அது வலியுறுத்தி உள்ளது.
-
7 May 2025 10:09 AM IST
“ஆபரேஷன் சிந்தூர்” – உத்தரபிரதேசத்தில் “ரெட் அலர்ட்”
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் முழுவதும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச காவல்துறையின் எக்ஸ் வலைதள பதிவின்படி, அனைத்து களப் பிரிவுகளும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, முக்கிய நிறுவல்களைச் சுற்றி பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உ.பி. காவல்துறை விழிப்புடன், ஆயுதம் ஏந்தியதாகவும், முழுமையாகத் தயாராகவும் உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 May 2025 10:03 AM IST
‘எங்கள் ஆயுதப்படைகள் குறித்து பெருமைப்படுகிறோம்’ – அமித் ஷா
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்க பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) “இலக்கு வைக்கப்பட்ட மற்றும் துல்லியமான” ராணுவத் தாக்குதல்களை நடத்தியதற்காக ஆயுதப்படைகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டினார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஆயுதப்படைகளைப் பற்றி பெருமைப்படுகிறோம். பஹல்காமில் எங்கள் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்பது பாரதத்தின் பதில். இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 May 2025 9:07 AM IST
மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன் – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப் கூறுகையில், வெள்ளை மாளிகை வாசல் அருகே நடந்து வரும்போதுதான் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து அறிந்தோம். கடந்தகாலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவும், பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்’ என்றார்.
-
7 May 2025 9:05 AM IST
“ஆபரேஷன் சிந்தூர்” : இந்திய ராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்துடன், தேசத்திற்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
-
7 May 2025 8:34 AM IST
“ஆபரேஷன் சிந்தூர்” – தலைவர்கள் வரவேற்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதல்மந்திரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
-
7 May 2025 8:29 AM IST
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்
கோட்லி, முசாபர்பாத், பாவல்பூர் ஆகிய 5 இடங்களில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதனைத்தொடந்து இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
7 May 2025 7:57 AM IST
“ஆபரேஷன் சிந்தூர்” – இந்தியாவின் தாக்குதலுக்கு ஓவைசி ஆதரவு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இந்தியாவின் “இலக்கு வைக்கப்பட்ட மற்றும் துல்லியமான” ராணுவத் தாக்குதல்களை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நமது ஆயுதப்படைகள் நடத்திய இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நான் வரவேற்கிறேன். பாகிஸ்தானின் ஆழமான அரசுக்கு இன்னொரு பஹல்காம் இல்லாத அளவுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்.. #ஆபரேஷன் சிந்தூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 May 2025 7:43 AM IST
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி… பிரதமர் மோடிக்கு சூஃபி கவுன்சில் தலைவர் நன்றி
அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சிலின் தலைவர் சையத் நசெருதீன் சிஷ்டி , இன்று நடந்த ஆபரேஷன் சிந்தூரை பாராட்டினார், மேலும் இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலிமையையும், உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு தீர்க்கமான தருணம் என்றும் கூறினார்.
இதுதொடர்பாக அவர் ஏ.என்.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், “இன்று, இந்தியா தனது வலிமையைக் காட்டியுள்ளது. அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன், மேலும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகிறேன்… நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
மேலும் அவர் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம். திருமணமான பெண்கள் அதைப் பயன்படுத்துவதால், சிந்தூருக்கு நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு, ஆனால் பஹல்காமில், அவர்களில் பலர் அதை இழந்துவிட்டனர், இன்று, ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதற்கு பழிவாங்கிவிட்டோம்” என்று சையத் நசெருதீன் சிஷ்டி தெரிவித்தார்