புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகள் மூலம் நடத்தி முடிக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால், மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்: நடந்தது என்ன? – ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்ட தகவல்கள்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது 2025 ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானியரும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேரை அவர்கள் படுகொலை செய்தனர். 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் மிகப் பெரிய எண்ணிக்கையில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு இந்த தாக்குதல் காரணமானது.
மிக நெருக்கமாக, குடும்பத்தினர் கண்முன்னே பெரும்பாலும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள பஹல்காம் தாக்குதல் சம்பவம் மிக கொடூரமான காட்டுமிராண்டி செயலை குறிப்பதாக இருந்தது. இந்தத் தாக்குதல் பற்றிய செய்தியை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன், கொல்லப்பட்ட முறையால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்றே அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெளிவாக தெரிகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு சாதனை அளவாக 23 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த பள்ளத்தாக்கு பகுதிக்கு வருகை தந்துள்ள நிலையில், பொருளாதாரத்தின் முக்கிய பகுதியான சுற்றுலாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் சீர்குலைப்பது அதனை பின்தங்கிய பகுதியாக மாற்றி பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் விளைநிலமாக தொடர்வதற்கு உதவி செய்வது இதன் மறைமுக கணக்காகும்.
மேலும், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஜம்மு காஷ்மீரிலும், நாட்டில் எஞ்சிய பகுதிகளிலும், மத பேதத்தை, ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றை தோல்வி அடையச் செய்த பெருமை இந்திய மக்களையும், மத்திய அரசையும் சாரும். தடுப்பு முன்னணி (டிஆர்எஃப்) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் குழு ஒன்று இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்தக் குழு ஐநா சபையால் தடைசெய்யப்பட்டுள்ள, பாகிஸ்தான் பயங்கரவாத குழுவான லஷ்கர் இ தொய்பாவின் ஒரு துணை அமைப்பாகும். 2024 மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஐநா சபையின் 1267 பொருளாதார தடைக் குழுவின் கண்காணிப்பு அணியிடம் அளித்த அரையாண்டு அறிக்கையில் தடுப்பு முன்னணி என்ற இந்த அமைப்பு பற்றிய தகவல்களை இந்தியா அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட குழுக்களில் இதன் பங்கு பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் கூட 2023 டிசம்பரில் டிஆர்எஃப் போன்ற சிறிய பயங்கரவாத குழுக்கள் மூலம் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் செயல்படுவது பற்றி கண்காணிப்பு அணியிடம் இந்தியா தகவல் தெரிவித்திருந்தது. ஏப்ரல் 25-ல் ஐநா பாதுகாப்பு சபை செய்தியறிக்கையில் டிஆர்எஃப் பற்றிய குறிப்புகளை நீக்குவதற்கு பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
OPERATION SINDOOR#JusticeServed
Target 3 – Mehmoona Joya Terrorist Camp at Sialkot.
Distance – 12 Km from International boundary.
Key training centre of Hizbul Mujahideen.
Used as control centre for revival of terrorism in Jammu and Kashmir.DESTROYED AT 1.11 AM on 07 May… pic.twitter.com/HO0MN3ggZY
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 7, 2025
பாகிஸ்தானிலும், பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளின் தொடர்புகள் இருந்தன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றிய புலனாய்வில் இது தெரியவந்துள்ளது. டிஆர்எஃப்-ன் பொறுப்பேற்பு மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களின் மறுபதிவு ஆகியவை லஷ்கர்-இ-தொய்பா பற்றி தெரிவிக்கின்றன. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையிலும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு கிடைத்த இதர தகவல்கள் அடிப்படையிலும், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பின்னணியில் இருந்தவர்கள் திட்டமிட்டவர்கள் ஆகியோர் பற்றிய துல்லியமான படத்தை நமது புலனாய்வு பிரிவு உருவாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலின் அம்சங்களும் இந்தியாவில் எல்லை கடந்த பயங்கரவாதத்தை செயல்படுத்தும் பாகிஸ்தானின் நீண்ட, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட, கேள்விக்கு அப்பாற்பட்ட நிலையிலான பதிவுடன் இணைந்ததாக இருக்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதும் நன்கு அறியப்பட்டதுதான். சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அங்கு தண்டனையின்றி வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள்.
மேலும், இந்த விஷயத்தில் பொருளாதார நடவடிக்கை பணிக் குழு போன்றவற்றின் மூலம், உலகத்தையும், சர்வதேச அமைப்புகளையும், பாகிஸ்தான் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதும் அறியப்பட்டதே சஜீத் மீர் விஷயத்தில் இந்த பயங்கரவாதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக மீண்டும் உயிருடன் இருப்பதாக அறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இது மிகவும் அப்பட்டமான ஓர் உதாரணமாகும்.
பஹல்காமில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் ஜம்மு – காஷ்மீரிலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும், கோபாவேசத்தை ஏற்படுத்தி இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தான் உடனான நமது உறவுகள் தொடர்பாக சில முதல்நிலை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த முடிவுகள் ஏப்ரல் 23 அன்று அறிவிக்கப்பட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
இருப்பினும், ஏப்ரல் 22 அன்று தாக்குதல் நடத்தியவர்களையும், அதற்கு திட்டமிட்டவர்களையும், நீதியின் முன் நிறுத்துவது அவசியமானதாகும். தாக்குதல் நடந்து 2 வார காலம் கடந்த பிறகும் தனது பகுதியில் அல்லது தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பயங்கரவாத கட்டமைப்புக்கு எதிராக பாகிஸ்தானிடமிருந்து வெளிப்படையான நடவடிக்கை எதுவும் இல்லை. இதற்கு பதிலாக அதன் செயல்பாடுகள் மறுப்புகளாகவும், குற்றச்சாட்டுகளாகவுமே உள்ளன.
OPERATION SINDOOR#JusticeServed
Target 2 – Gulpur Terrorist Camp at Kotli.
Distance – 30 Km from Line of Control (POJK).
Control Center and Base of Lashkar-e-Taiba (LeT)
Used for revival of terrorism in Jammu and Kashmir.DESTROYED AT 1.08 AM on 07 May 2025.… pic.twitter.com/JyYlZEAKgU
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 7, 2025
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளை நமது உளவுப் பிரிவு கண்காணித்ததை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக எந்த நேரத்திலும், மேலும் தாக்குதல் நடக்கக் கூடும் என்று தெரிகிறது. எனவே, இதை முன்கூட்டியே தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எல்லை தாண்டிய தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் தனது உரிமையை இந்தியா செவ்வாய்க்கிழமை அதிகாலை செயல்படுத்தியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த நடவடிக்கைகள் அளவானவை பதற்றத்தை அதிகரிக்காதவை, சரியான விகிதத்தில் ஆனவை, பொறுப்பானவை ஆகும். பயங்கரவாத கட்டமைப்பை அழிப்பதிலும், இந்தியாவுக்குள் அனுப்பப்பட இருந்த பயங்கரவாதிகளை செயலிழக்க செய்வதிலும் இவை கவனம் செலுத்தின. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து 2025 ஏப்ரல் 25 அன்று பாதுகாப்பு சபை வெளியிட்ட செய்தி அறிக்கையை உங்களுக்கு நினைவுபடுத்தி நான் மேற்கோளாக கூறுகிறேன்.
“கண்டிக்கத்தக்க இந்த பயங்கரவாத செயலை செய்தவர்களையும், அமைப்பாளர்களையும், நிதி உதவி செய்தவர்களையும், ஆதரவு அளித்தவர்களையும் பிடிப்பதும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதும் அவசியமாகும்.” இந்தப் பின்னணியில் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளை காண வேண்டும் என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் பற்றி கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
OPERATION SINDOOR#JusticeServed
Target 1 – Abbas Terrorist Camp at Kotli.
Distance – 13 Km from Line of Control (POJK).
Nerve Centre for training suicide bombers of Lashkar-e-Taiba (LeT).
Key training infrastructure for over 50 terrorists.DESTROYED AT 1.04 AM on 07 May 2025.… pic.twitter.com/OBF4gTNA8q
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 7, 2025
பிரதமர் மோடி கூறியது என்ன? – “துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பஹல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது. முன்கூட்டியே செய்யப்பட்ட விரிவான தயாரிப்புகளின் அடிப்படையை கண்டிப்பாக பின்பற்றி ராணுவம் இப்பணியை மேற்கொண்டது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து வேட்டையாடிய நமது ராணுவத்தின் செயல் மிகவும் பாரட்டத்தக்கது. பெருமை கொள்ளத்தக்கது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷாக் கூறியது என்ன? – பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை ஒட்டியுள்ள எல்லை மாநிலங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், “இந்தியாவின் எல்லைகள், ராணுவம் மற்றும் குடிமக்களுக்கு சவால் விடத் துணிபவர்களுக்கு பாரதத்தில் இருந்து கிடைத்த ஒரு பொருத்தமான பதில்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைப் புறக்கணிக்காமல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் உலகுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. மேலும், “சமூக மற்றும் பிற ஊடக தளங்களில் தேவையற்ற நபர்களால் தேச விரோத பிரச்சாரம் செய்யப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு தேவை. மாநில அரசுகள் மற்றும் மத்திய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
ராஜ்நாத் சிங் கூறியது என்ன? – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட்ட முகாம்களை பாதுகாப்பு படையினர் துல்லியம், முன்னெச்சரிக்கை மற்றும் கருணையுடன் செயல்பட்டு தாக்கி வரலாற்றை உருவாக்கியுள்ளனர். திட்டத்தின்படி, இலக்குகள் அழிக்கப்பட்டன. பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நமது ஆயுதப் படைகள் இன்று என்ன செய்தன என்பதை உலக நாடுகள் கண்டுள்ளன. இந்த நடவடிக்கை மிகவும் சிந்தனையுடனும், அளவுடனும் மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளின் மன உறுதியை குலைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் முகாம்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார்.
பாகிஸ்தான் தாக்கினால்..? – இதனிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ, இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் பவல், சவுதி அரேபியா பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பன், ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் மசாடாகா ஒகானா ஆகியோரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போனில் பேசினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குல் நடத்தியது குறித்து அவர் விளக்கினார். அப்போது, “பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. ஆனால், பாகிஸ்தான் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால் மீ்ண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது” என இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார். இதேபோல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கத்தார் பிரதமர் ஷேக் முகமதுவை தொடர்பு கொண்டு, எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தது கவனிக்கத்தக்கது.
எல்லையில் பாக். தாக்குதலும் பதிலடியும்: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்துள்ளனர். எல்லையில், பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில், அதற்கு இந்திய ராணுவத் தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது. >>முழு விவரம்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் – பலி 15 ஆனது; 43 பேர் காயம்